தமிழ் மாதங்களில் முதலாவதாக வரும் சித்திரை மாதம் முதல் நாள், தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டில் பூஜை அறையை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து பழங்களை வைத்து காண்பதன் மூலம் வருடம் முழுவதும் மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்பது நம்பிக்கையாக கருதப்படுகிறது. குறிப்பாக கோவில்களில் இதுபோன்று நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் சித்திரை முதல் நாள் மற்றும் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்தும் பழங்களால் அலங்கரித்தும் வழிபட்டனர்.
இதில் குறிப்பாக திருச்செங்கோடு பகுதியில் உள்ள சிறப்பு வாய்ந்த சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கனிகளால் அலங்கரித்தும் இருந்தது. மேலும் திரளான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
இதுமட்டுமின்றி நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஒரே கல்லிலால் ஆன ஆஞ்சநேயர் கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் பால் தயிர் சந்தனம் வாசனையும் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின் சாமிக்கு சிகப்பு பட்டு வேஷ்டி துண்டு அணிவிக்கப்பட்டது. மேலும் சாமி தரிசனம் செய்ய மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்தனர். நரசிம்மர் கோயிலிலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை புரிந்தார்கள்.
இதேபோல் அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலிலும், கைலாசநாதர் கோயிலிலும் புத்தாண்டு முன்னிட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைக் காண திரளான மக்கள் குடும்பத்துடன் வந்து வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.