நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இறையமங்கலம் என்ற ஊரில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த பெருமாள் மலையின் இளையபெருமாள் என்கிற பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோயிலில் சித்திரைத் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இக்கோயில் திருவிழா கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இதில் ஒவ்வொரு நாளும் சிவாமி புஷ்ப பல்லாக்கில் வலம் வருதல், சிறப்பு பூஜைகள் தினந்தோறும் நடைபெற்றது. அதுமட்டுமின்றி ஹனுமந்த வாகனத்தில் கிரிவலம் வருதல், கருட வாகனத்தில் கிரிவலம் வருதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.
மேலும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரமும் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி கல்யாண மண்டபத்தில் சுவாமி அருள்பாலித்து பள்ளியறை பூஜைகளும் நடத்தப்பட்டது.
இக்கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான இளைய பெருமாள் மற்றும் , ஶ்ரீதேவி, பூதேவி ஊற்சவ திருக்கல்யாண வைபவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
முன்னதாக சுவாமி வீதி உலா வந்து எழுந்தருளினார். அதன் பின் பக்தர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து மங்கள இசை வாசிக்க திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே இளைய பெருமாள் சுவாமி ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் திருத்தேரில் எழுந்தருளி தேர்கள் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
செய்தியாளர்: சே.மதன்குமார்-நாமக்கல்