நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இறையமங்கலத்தில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த பெருமாள் மலையின் இளையபெருமாள் என்கிற பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோயிலில் சித்திரைத் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இக்கோயில் திருவிழா கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இதில் ஒவ்வொரு நாளும் சிவாமி புஷ்ப பல்லாக்கில் வலம் வருதல், சிறப்பு பூஜைகள் என தினந்தோறும் நடைபெற்றது. அதுமட்டுமின்றி ஹனுமந்த வாகனத்தில் கிரிவலம் வருதல், கருட வாகனத்தில் கிரிவலம் வருதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.
மேலும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரமும் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி கல்யாண மண்டபத்தில் சுவாமி அருள்பாலித்து பள்ளியறை பூஜைகளும் நடத்தப்பட்டது.
அதைத் தொடா்ந்து தோ்க்கலசம் வைத்தல் திருக்கல்யாண வைபவம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தோ்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக இளைய பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடா்ந்து ஆஞ்சநேயா் சுவாமி தேரில் எழுந்தருளினாா். அதன் பின் பக்தர்களால் திருத்தோ்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
தேர்கள் மலையை சுற்றி பக்தர்களால் இழுத்துவரப்பட்டு நிலை சோ்க்கப்பட்டது. இளைய பெருமாள் சித்திரை தேர்த்திருவிழா கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது தளா்வுகள் அறிவிக்கப்பட்டதால் உள்ளுர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்த்திருவிழாவில் பங்கேற்றனர்.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.