நாமக்கல்லில் கொளுத்தும் கோடை வெயிலால் தங்களது உடல் சூட்டை தணித்துக் கொள்ள மக்கள் சாலையோரங்களில் விற்கப்படும் இளநீர், நுங்கு, தர்பூசணி போன்றவற்றை நாடிச் செல்வதால் விற்பனை களை கட்டி வருகிறது.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் கூடிக்கொண்டேபோகிறது. ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் பெரும்பாலான பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.
இந்த நிலையில், வெயிலால் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க நீர்மோர், பழரசம், கூழ், கற்றாழை சாறு, முலாம் பழம், தர்பூசணி போன்றவற்றை மக்கள் நாடி செல்கின்றனர். இதனால் பழக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இதில் முக்கியமாக கோடை வெயிலால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் நுங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் சாலையோரங்களில் நுங்கு விற்பனை தற்போது சூடு பிடித்து உள்ளது.
கோடைக்காலத்தில் நம் ஊரில் எளிதாக கிடைப்பது நுங்கு. நுங்கு சுவையானது மட்டுமல்லாமல் அதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்து இருக்கிறது. வெயில் காலத்தில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்த்தைக் கொண்டுள்ளது நுங்கு.
அதுமட்டுமின்றி உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு பெரிதும் உதவியாக நுங்கு இருக்கிறது.
நுங்கில், வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, உடல்வெப்பத்தை தணிக்கக் கூடியது.
இதனால் தற்போது நுங்கு வியாபாரம் சற்று அதிகரித்து உள்ளது. சாலையோரத்தில் சிறு சிறு கடைகள் அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர். நுங்கு 10 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் நுங்கு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.