நாமக்கல் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பெற விண்ணப்பங்கள் அளிக்க சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் முனிசிபாலிட்டியில் உள்ள நிலவங்கி திட்டப்பகுதி 3 மற்றும் நிலவங்கி திட்டப்பகுதி 4 ஆகிய இடங்களிலும், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் நாகராஜபுரம் பகுதியிலும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 960, 192 மற்றும் 240 என மொத்தம் 1, 392 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு தயார் நிலையில் இருக்கிறது.
இக் குடியிருப்புகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்ய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் வீடு பெற விரும்புவோர் வருகின்ற ஏப்ரல் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நாமக்கல் தாசில்தார் ஆபீசில் நடைபெறும் சிறப்புமுகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் விண்ணப்பத்துடன் குடும்பத்தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், பேங்க் பாஸ் புத்தகம் மற்றும் குடும்ப போட்டோ ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டும். அதுமட்டுமின்றி பயனாளியின் ஆண்டு வருமானம் ரூபாய் 3 லட்சத்திற்கு குறைவாக இருக்கவேண்டும்.
பயனாளி மற்றும் பயனாளியின் குடும்பத்தினருக்கு சொந்த வீடு நிலம் இருக்கக்கூடாது. மேலும் பயனாளி அரசு வழங்கும் குடியிருப்பை விற்கவோ அல்லது வாடகைக்கு விடமாட்டேன் என்ற உறுதி மொழி படிவம் சமர்ப்பிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளி நகரப்பகுதியில் வாடகை வீட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். வீடுஒதுக்கீடு பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு பயனாளியும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகை, நிலவங்கி திட்டப்பகுதி 3 எனில் ரூபாய் 1, 49, 000, நிலவங்கி திட்டப்பகுதி 4 எனில் ரூபாய் 1, 60, 700- மற்றும் நாகராஜபுரம் திட்டப்பகுதி எனில் ரூபாய் 1, 64, 075 வீதம் முன் பணமாக செலுத்தவேண்டும்.
விருப்பமுள்ள பயனாளிகள் முகாம் நடைபெறும் நாளன்று காலை 10 மணிமுதல் 5 மணிவரை மேற்குறிப்பிட்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பித்து வீடு ஒதுக்கீடு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.