நாமக்கல் போறீங்களா..மேம்பாலம் பணிகள் தொடங்கிருச்சு..2 வருஷத்துக்கு மாற்றுப் பாதை இதோ..
பள்ளிபாளையத்தில் இருந்து தோக்கவாடி வரை செல்லும் சாலை அகலப்படுத்தும் பணிகள் கடந்த ஒரு வருட காலமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பள்ளிபாளையத்தில் இருந்து திருச்செங்கோடு வரை செல்லும் சாலையில் உள்ள ஆசிரியர் காலனி பேருந்து நிறுத்தம் வரை மேம்பாலம் கட்டும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது.
இதனால் அச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்து.மேலும் ஆலாம்பாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் முதற்கட்டமாக தொடங்கியது. இதில் தூண்கள் அமைப்பதற்காக மிகப்பெரிய அளவிலான குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன.
இதனால், அவ்வழியே கனரக வாகனங்கள் செல்லாத வகையில், நெடுஞ்சாலை துறை சார்பில் பேரிகார்டுகள் வைத்து போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.
அதன்படி எஸ்பிபி மேம்பாலம் அருகே டீச்சர்ஸ் காலனி பகுதியிலிருந்து பள்ளிபாளையம் டிவிஎஸ் மேடு ராஜா மெஸ் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு செல்லும் பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள் எஸ் பி காலனி வழியாக காவேரி ஆர்.எஸ் சுரங்க பாலம் வழியே பள்ளிபாளையம் ராஜாமெஸ் கார்னர் பேருந்து நிலையம் திரும்பி ஈரோடு, குமாரபாளையம் செல்ல வேண்டும்.
அதுபோல ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு செல்லும் வாகனங்கள் பள்ளி பாளையத்தில், ராஜாமெஸ் கார்னரில் திரும்பி பேப்பர் மில் ரோடு வழியாக வழியாக எஸ் பி.பி காலனி சென்று திருச்செங்கோடு செல்ல வேண்டும்.
ஈரோட்டில் இருந்து வரும் கனரக வாகனங்கள் சோலார், கரூர்ரோடு ரிங்ரோடு மூலம் கொக்கராயன் பேட்டை, பாலம் வழியாக திருச்செங்கோட்டுக்கு செல்லலாம்.
அதேபோல் குமாரபாளையம் பகுதியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் ஈரோடு வழியாகவோ அல்லது வெப்படை, திருச்செங்கோடு வழியாக பேப்பர்மில், பொன்னி சர்க்கரை ஆலைக்கு செல்ல வேண்டும். பள்ளிபாளையம் காவேரி ஆர்எஸ் பாலம் வழியே செல்ல அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பாலம் ஆலாம்பாளையம் முதல் பள்ளிபாளையம் வரை சுமார் 3 கிலோமீட்டர் வரை அமைக்கப்பட உள்ளது. மேம்பால பணிகள் 2 ஆண்டுகளுக்குள் முடிவடையும் என கூறப்படுகிறது. அதுவரை வாகன ஓட்டிகள் வேலை செய்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும் உள்ளூர் மக்கள் வேலை நடைபெறும் பகுதிகளில் அடிக்கடி சென்று இடையூறுகள் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மேம்பாலம் பணிகள் முடிவுக்கு வந்த பின்னர் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.