நாமக்கல் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி பொருட்காட்சி மற்றும் கண்காட்சி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி, பொருட்காட்சி மற்றும் கோயில் திருவிழாக்களில் மின்சாரத்தால் இயங்கும் ராட்டினங்கள், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள், தனியார் மற்றும் அறக்கட்டளைகளுக்கு சொந்தமான சமூக கூடங்கள், திறந்த வெளியிடங்கள் மற்றும் கோயில் இடங்களில் நடத்துவதற்கு கண்டிப்பாக அரசின் முன் அனுமதி பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு அம்சங்கள், பொருட்காட்சி, வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடத்துபவர்கள் நடைபெறும் இடத்திற்கான தடையின்மை சான்று காவல்துறையினர் தடையின்மை சான்றுதல் பெற வேண்டும்.
மேலும் தீயணைப்பு துறையினரின் தடையின்மை சான்று, சம்பந்தப்பட்ட பகுதி உள்ளாட்சி அமைப்பின் சுகாதார தடையின்மை சான்று மற்றும் நிறுவனத்தின் உரிமையாளர் 3 ஆண்டு வருமானவரி தாக்கல் செய்ததற்கான படிவத்தின் நகல் மற்றும் முதல்-அமைச்சர் நிவாரண நிதி காசோலை ஆகியவற்றுடன் நிகழ்ச்சி நடைபெறும் 15 நாட்களுக்கு முன்னரே மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் அரசு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிபந்தனைகளை பின்பற்றாமல் எந்த அனுமதியும் பெறாமலோ, தன்னிச்சையாக சில தடையின்மை சான்றுகள் மட்டும் பெற்றோ, அரசு அனுமதி இல்லாமல் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி, பொருட்காட்சி நடத்த கூடாது.
மீறி நடத்தினால் எந்தவித முன்னறிவிப்புமின்றி தனியார் பொருட்காட்சியை நிறுத்தவும், மின்சாரத்தால் இயங்கும் ராட்டினங்கள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை பறிமுதல் செய்ய மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.