நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் கொன்னையார் என்ற ஊர் உள்ளது. இங்கு, சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் வசித்து வரும் குடும்பங்கள் கல் உடைக்கும் தொழில் மற்றும் கட்டுமான தொழில்களுக்கு சென்று வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணிமுத்தாறு வாய்க்காலில் இப்பகுதி மக்களுக்கு தண்ணீர் வசதியை ஏற்படுத்த குழாய் ஒன்று அமைத்து கொடுத்துள்ளனர். தற்போது, அது உடைந்து நான்கு மாத காலமாக அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், கொன்னையார் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர்.
இதுகுறித்து, பல முறை ஊராட்சி மன்ற தலைவரிடம் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் இடமும் முறையீடு செய்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி பொதுமக்கள் ஆத்திரமடைந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து எலச்சிபாளையம் காவல் ஆய்வாளர் குலசேகரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன், கிராம நிர்வாக அலுவலர் உட்பட குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண்பதாக பொதுமக்களிடம் வாக்குறுதி கொடுத்தனர். அதன் பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.