நாமக்கல் மாவட்டத்தின் இன்றைய (ஏப்ரல் 12) முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு..
நாமக்கல் மண்டலத்தில் மாற்றமின்றி விற்கப்படும் முட்டை விலை!
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து அதிரடியாக 10 காசுகள் உயர்த்தி தற்போது ஒரு சில நாட்களுக்கு பின்பு முட்டை விலை 4 ரூபாய் 45 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து முட்டை விலை சற்று உயர்வு சந்தித்து வருகிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை உடனே கையகப்படுத்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டம் குண்டனி நாடு ஊராட்சி அடுக்கம் புதுக் கோம்பை பகுதியில் புல எண் 41 அரசு புறம்போக்கு நிலமாகும். கடந்த 2019 ம் ஆண்டு இங்கு கார்த்திகேயன் என்கிற ராஜாராகவன் என்பவர் சட்ட விரோதமாக கட்டிடங்கள் அமைத்து மாயாலயம் என்ற பெயரில் ஆக்கிமித்தார். அங்கு செல்வதற்கு முறையான பாதை வசதி ஏதும் இல்லாத காரணத்தால் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் தளுகை பாதர் பேட்டை விவசாயிகளின் விவசாய நிலங்கள் வழியாக அங்கு கோவில் அமைப்பதாகத்தான் முதலில் கூறினார்கள். இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
வெற்றிலை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை!
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி, குப்புச்சிபாளையம், மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைக் கொடிகளை நடவு செய்துள்ளனர். மேலும் வெற்றிலைகள் நன்றாக விளைந்ததும் கூலி ஆட்கள் மூலம் வெற்றிலைகளை பறித்து நூறு வெற்றிலை கொண்ட ஒரு கவுளியாகவும் பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர். இதனிடையே வெற்றிலை வரத்து அதிகரிப்பாலும், திருமண முகூர்த்தம் இல்லாததாலும், கோயில் விசேஷங்கள் அதிகம் இல்லாததாலும் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வெற்றிலை விலை வீழ்ச்சியால் போதிய விலையும் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
(12.04.2022) இன்று உழவர் சந்தையில் மாற்றமின்றி விற்கப்படும் காய்கறி விலை!
நாமக்கல் உழவர் சந்தையில், கடந்த சில நாட்களாக காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைந்த விலையில் விற்கப்பட்டு வந்தது. சில நாட்களாக உழவர் சந்தையில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் 5ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வு சந்தித்து இருந்தது.மேலும் பெரும்பாலான காய்கறிகளின் விலையில் எந்தமாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது...
நாமக்கல்லில் நாளை வேலைவாய்ப்பு முகாம்- முழு விவரங்கள் இதோ!
வெண்ணந்தூரில் வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை ஏப்ரல் 13 நடைபெறுகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக மாவட்ட திறன் பயிற்சி திட்டத்தின் கீழ், இயக்க மேலாண் அலகு நடத்தும், வட்டார அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை 13ம் தேதி வெண்ணந்துார் வட்டார இயக்க மேலாண் அலகில் நடை பெறுகிறது.
கோழிப்பண்ணை தொழிலாளி தற்கொலை!
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள பி.ஆயிபாளையம் கிராமத்தை சேர்ந்த தங்கதுரை அங்கு உள்ள கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
அவருக்கு குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் விரக்தி அடைந்த தங்கதுரை, வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்குகொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து, புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு!
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், கணவாய்ப்பட்டி, பால்காரர் தோட்டத்தில் உள்ள 130 அடி ஆழ கிணற்றில் கால் தவறி விழுந்த செல்வராணி வயது 60 என்ற மூதாட்டியை, தீயணைப்புத் துறையினரின் சாதுரியத்தால் உயிருடன் மீட்கப்பட்டார். செய்தியை அறிந்து விரைந்து செயல்பட்டு மூதாட்டியை உயிருடன் மீட்ட ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு குவியும் பாராட்டுகள்.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.