நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் பள்ளிபாளையம் செல்லும் வழியில், தெப்பக்குளம் என்ற பகுதியில் ஐயம்மா என்ற வயதான பாட்டி உள்ளார். தள்ளாடும் வயதிலும் தள்ளுவண்டி வைத்து தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறார்.
பழங்கள் மற்றும் காய்கறிகளை தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்து வரும் இவர், தன்னுடைய பிள்ளைகளுக்கு எந்தவொரு கஷ்டத்தையும் கொடுக்கக் கூடாது என்று இந்த வியாபாரத்தை செய்து வருவதாக கூறுகிறார்.
இதில் கிடைக்கும் வருமானத்தில் வீட்டு வாடகை, தனது மருத்துவச் செலவுகளையும் பூர்த்தி செய்து கொள்கிறார். மேலும் பிள்ளைகள் நம்மை கவனிக்காமல் விட்டாலும் அவர்களை ஒரு பெரிய இடத்தில் உட்கார வைக்கும் அளவிற்கு வளர்க்க வேண்டும் என்று கூறி நெகிழவைக்கிறார்.
தொடர்ந்து ஐயம்மா நம்மிடம் கூறுகையில்,
"பல வருடங்களாக இதே தள்ளுவண்டியில் சீசனுக்கு ஏற்ற மாதிரி மக்களுக்கு தேவையான பழங்கள் காய்கறிகள் வியாபாரம் செய்து வருகிறேன். எனது கணவரும் இதே வியாபாரம் தான் செய்கிறார். இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு எங்களை பார்த்துக் கொள்கிறோம்.
எல்லா நாளும் வியாபாரம் செய்வேன். என்றாவது வெளியே சென்றாலும்கூட அந்த வேலை முடித்துவிட்டு உடனே இங்கு வந்து விடுவேன். ஏனென்றால், என்னுடைய ஆசைகள் எல்லாம் இந்த வியாபாரத்தில்தான் இருக்கிறது. எனக்கு சோகம், கஷ்டம் எதுவாக இருந்தாலும் இங்கு வந்தால் போதும் அனைத்து பறந்து விடும்.
நம் உடம்பில் தெம்பு இருக்கிற வரைக்கும் ஒரு வேலை செய்து நம்மைப் பார்த்துக் கொள்ளவேண்டும்" என்கிறார் வாழ்வாதாரத்துக்கு பிள்ளைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் பெற்றோர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் விதமாக.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.