நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் புகழ்பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாகும். இக்கோயிலின் மாசித் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதில் குண்டம் இறங்கும் நிகழ்வு வருடா வருடம் சிறப்பாக நடைபெறும். வேறு எங்கும் இல்லாத அளவிற்கு 60 அடி நீளம் கொண்ட குண்டம் கொண்ட இக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்வில் பங்கேற்பார்கள்.
15 நாட்கள் நடைபெறும்இக்கோயிலின் மாசித் திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கியது. விழாவின் தொடக்க நாளான்று பூச்சாட்டுதல் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதற்காக இறையமங்கலம் ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து சின்ன ஓங்காளியம்மனுக்கு பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்தனர்.
பின்னர் காப்பு கட்டுதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் குண்டம் இறங்குவதற்காக கங்கனம் கட்டுபவர்கள் முதலாவது நாள் தொடக்கத்திலே 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கட்டிச் சென்றனர்.
அதன் பின் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் குண்டம் இறங்குவதற்காக கங்கனம் கட்டிச் சென்றனர். பின்பு தீர்த்த குடம் எடுத்து வருதல், அம்மன் அழைத்தல் மற்றும் அக்னிச்சட்டி எடுத்து வருதல் குத்துவிளக்கு பூஜை, பக்தர்கள் அக்னி கரகம் எடுத்தல், அலகு குத்தி நான்கு ரதவீதியில் வலம் வருதல் என ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றினார்.
அதனைத் தொடர்ந்து 108 சங்கு பூஜை ,பூச்சொரிதல், குண்டத்து பூஜை, புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா என ஒவ்வொரு நாளும் மிக விமரிசையாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதனிடையே, விழாவின் முக்கிய நாளான மாசி குண்டம் இறங்கும் திருவிழா மார்ச் 9ம் தேதிநடைபெற்றது. முந்தைய நாள்விறகுகளால் குண்டத்தில் தீ பற்ற வைத்து குண்டத்தில் இறங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன் பின், நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் பூசாரி கும்பத்துடன் முதலாவதாக தீ குண்டத்தில் இறங்கினார். அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.
ஆண்கள் நீண்ட வரிசையிலும் கைக்குழந்தைகளுடன் பெண்கள் வரிசையாகவும் நிதானமாகவும் குண்டம் இறங்கினார்கள்.
இதற்காக நேற்று மாலை முதலே 15,000க்கும் மேற்பட்ட மாலை அணிந்த பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். மேலும் இக்கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதன் மூலம் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும், உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்கள், தீராத பிரச்சனைகள் கண்டிப்பாக தீரும் என்று கூறுகிறார்கள். மேலும் இக்கோவிலில் முக்கியமாக ஒவ்வொருவரும் குண்டம் இறங்கும் போது தங்களுடைய காலில் அனல் படும் போது சாமி மேல் உள்ள வெண்ணெய் கொஞ்சம் கொஞ்சமாக உருகும் என்று தெரிவித்தனர்.
மேலும் வரும் சனிக்கிழமை அன்று பொங்கல் விழா, வாணவேடிக்கை, தப்பாட்ட நிகழ்ச்சிகள், தயிர் சாதம் படைத்தல், மஞ்சள் நீராட்டு என திருவிழா நிறைவு பெற உள்ளது.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.