நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டத்தில் மோடமங்கலம் என்ற ஊர் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் என்ற பழமை வாய்ந்த கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் மஹா சிவராத்திரி அன்று வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா கடந்த 28ம் தேதி தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான முகம் எடுக்கும் நிகழ்வு, சிவராத்திரி அன்று நள்ளிரவு 1 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
முகம் எடுத்தல் நிகழ்வு என்பது, அரிசி மாவில் மூன்று வித்தியாசமான முகம் போன்று உருவங்களை செய்து, சுற்றியும் வேப்பிலை மற்றும் இருபுறமும் தீ பந்தம் வைத்து 50 கிலோவுக்கு மேல் எடை கொண்ட அந்த உருவத்தை தூக்கி ஆடிக் கொண்டு, கோயிலிலிருந்து மயானம் வரை செல்வார்கள். பின்னர் மயானத்தில் காவு சோறு கொடுக்கப்படும்.
அங்காளம்மன், தீயசக்திகளை அழித்து விட்டு கோபம் தாங்காமல் இதுபோன்ற உருவங்களை பதித்து ஆக்ரோஷத்துடன் மயானக் கொள்ளையில் ஈடுபட்ட நிகழ்வாக இங்கு முகம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள் உள்ளூர் மக்கள்.
இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் கூறுகையில், காலகாலமாக இதுபோல திருவிழா நடத்தி வருகிறோம். இது எங்கள் ஊரின் முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. உறவினர்கள் எங்கு இருந்தாலும் திருவிழா அன்று கட்டாயம் ஊருக்கு வந்து விடுவார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்வாக முகம் எடுத்தல், பிள்ளை பாவாடை ஆடுதல் என வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் தீர்த்தம் குடம் எடுத்தல், கரகம் அழைத்தல், அக்னி சட்டி எடுத்தல், மஞ்சள் நீராடல் என பல நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.