நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய 5 நகராட்சிகளில் உள்ள 151 வார்டுகள், 19 பேரூராட்சிகளில் 288 வார்டுகள் என 439 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது.
இதில், திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு சற்று மந்தமான நிலையில் தொடங்கினாலும் காலை 11 மணிக்கு மேல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில், ஆண்களை விட பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளின் பெண் வாக்காளர்களின் கூட்டம் அலைமோதியது. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் தன்னார்வலர்களின் உதவியுடன் வீல் சேரில் உட்கார்ந்து சென்று தங்களுடைய வாக்குகளை செலுத்தி சென்றனர்.
மேலும், இளைஞர்கள் தங்களுடைய வாக்குகளை செலுத்துவதற்காக பெரும் பட்டாளமாக ஒன்றாக வந்து, தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றி சென்றனர்.
இதுகுறித்து இளைஞர்களிடம் கேட்டபோது, ”வாக்களிப்பது நம்முடைய தலையாய கடமை. ஒவ்வொரு தேர்தலின்போதும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வந்துதான் வாக்களிப்போம். அப்போதுதான், இளைஞர்கள் பங்களிப்பு பற்றி தெரியும். மேலும் எங்களின் சிலபேர் வெளியூர்களில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தாலும் வாக்களிப்பதற்காகவே கிளம்பி வந்துள்ளார்கள்.
100 சதவீதம் வாக்குப்பதிவு எங்களின் இலக்காக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஒன்றாகச் சென்று வாக்களித்தோம் என்று தெரிவித்தனர்.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.