நாமக்கல் மாவட்டத்தில் 27.04.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...
அடுத்த 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்- ஆராய்ச்சி நிலையம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நாளை வியாழக்கிழமை மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமில்லை
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து அதிரடியாக 20 காசுகள் குறைத்து தற்போது நீண்ட நாட்களுக்கு பின்பு முட்டை விலை சரிவு சந்தித்து 3 ரூபாய் 60 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சில நாட்களாக முட்டை தொடர் சரிவு சந்தித்து வருகிறது.
இன்று உழவர் சந்தையில் விற்கப்பட்ட காய்கறி விலை!
நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் 2, 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வு சந்தித்து விற்கப்பட்டு வருகிறது.மேலும் பெரும்பாலான காய்கறிகளின் விலையில் நேற்றைய விலையை விட குறைந்தும், ஏற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டது.
இளைஞர்களுக்கு வேலை கேட்டு 3000 கிலோமீட்டர் சைக்கிள் பேரணி!
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில அளவிலான சைக்கிள் பேரணியை இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட குழு, குமாரபாளையம் ஒன்றிய குழு சார்பாக மலர் தூவி வரவேற்பு வழங்கப்பட்டது.
அரசு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை நிரந்தர பணியிடங்களாக உருவாக்கிட வேண்டும், சிறு குறு தொழில் நிறுவனங்களை பாதுகாத்திட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை விற்கக் கூடாது\" என்கின்ற 4 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருச்சியில் மே1 ம் தேதி மாபெரும் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு கலந்துகொள்ள தமிழகத்தில் நான்கு மூலைகளில் இருந்து (சென்னை, கன்னியாகுமரி, கோவை, பாண்டிச்சேரி) 3000 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூரில் இருந்து வந்த சைக்கிள் பேரணியில் 100க்கு மேற்பட்டோர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வெப்படை வந்தடைந்தனர். மேலும் இவர்களை மலர் தூவி வரவேற்றனர்.
கொல்லிமலை வட்டார அளவிலான சுகாதார திருவிழா
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள கொல்லிமலை வல்வில் ஓரி அரங்கத்தில் நடைபெற்ற நாமக்கல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் கொல்லிமலை வட்டார அளவிலான சுகாதார திருவிழா (Block Health Mela) மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
தேசிய மாணவர் படை சார்பில் சுத்தம் செய்யப்பட்ட பள்ளி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படை சார்பில், பள்ளியை சுற்றி உள்ள குப்பைகள் மற்றும் புதர்கள் அனைத்தும் தூய்மை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். தேசிய மாணவர் படையின் ஆசிரியர் அந்தோணி சாமி இந்த தூய்மைப்பணியினை ஏற்பாடு செய்து இருந்தார்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மாநில கலாசாரங்களை அறிய நடைப்பயணம்
ஒவ்வொரு மாநிலங்களின் கலாசாரத்தை தெரிந்து கொள்வதற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராஜஸ்தான் இளைஞர் பிரதீப்குமார் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு கலாசாரங்களைத் தெரிந்து கொள்வதற்காக கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கினார்.தற்போது நாமக்கல் வந்தடைந்துள்ளார். மேலும் இன்னும் ஒரு மாதத்தில் கன்னியாகுமரியைச் சென்றடைய உள்ளார். நாள்தோறும் 25 முதல் 30 கி. மீ. தொலைவு நடைப்பயணம் மேற்கொள்வதாகவும், தமிழகத்தில் உள்ள கோயில்கள், மக்களின் கலாச்சாரம், கிராமிய உடைகள், இட்லி, தோசை போன்ற உணவுகள் கவர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.
முன்னாள் மாணவர்களின் சந்திப்பு
ராசிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1986-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் அவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள் 80 பேரும், அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் பாராட்டு தெரிவித்து கவுரவப்படுத்தினர். இதில் கலந்து கொண்ட ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
3 மாதங்களில் 24 கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம்
தமிழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் அவசர சேவையில் தமிழகம் முழுவதும் 1, 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் இருபத்தி ஏழு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகிறது. சாலை விபத்து, நெஞ்சுவலி, விஷ பூச்சிகள் கடித்தல், தற்கொலை முயற்சி, பிரசவம் போன்ற பல்வேறு அவசர சேவைக்கு இந்த வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் கடந்த 3 மாதங்களில் 24 கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவங்கள் பார்க்கப்பட்டு உள்ளதாக 108 ஆம்புலன்ஸ் சேவையின் சேலம் மண்டல மேலாளர் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையத்தில் நீர் மாசு தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
குமாரபாளையத்தில் நீர் மாசு தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. குமாரபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை, தேசிய
பசுமை படை, குமாரபாளையம்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என். சி. சி. மாணவர்கள், சார்பில் நீர் மாசுபடுவது தடுத்தல் விழிப்புணர்வு பேரணி தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமையில் நடைபெற்றது.
ஏரி தூர்வாரும் பணி தொடக்கம்
திருச்செங்கோடு ஒன்றியத்தில் அரசின் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தின் கீழ் வரகூராம்பட்டி ஊராட்சி, அய்யக் கவுண்டம்பாளையத்தில் ஜேசிஐ டிவைன், ஜேசி இன் சர்வீஸ் அமைப்புகள் சார்பில் ஓடை, ஏரி தூர்வாரும் பணி தொடங்கியது.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.