நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே அப்பூர்பாளையம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள சிறப்பு வாய்ந்த முத்து மாரியம்மன் கோவில் திருவிழா வருடாவருடம் நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாட்டுதல் நிகழ்வுடன் தொடங்கியது.
இதனையடுத்து பக்தர்கள் தினமும் முத்து மாரியம்மனுக்கு புனித நீர் மற்றும் பால் ஊற்றி வழிபட்டனர். மேலும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்களும் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து தீர்த்தம் குடம் எடுத்தல், அக்கினி கரம் எடுத்தல், அலகு குத்துதல், வாணவேடிக்கை, அம்மன் திருவீதி உலா, பொங்கல் வைத்தல், தயிர் சாதம், மஞ்சள் நீராடல் என பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் இக்கோயில் திருவிழா இவ்வூர் மக்களுக்கு முக்கிய நிகழ்வாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான மக்கள் பங்கேற்பாளர்கள்.
இதனிடையே திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் முன்னதாக இரவு பூக்குண்டத்துக்கு அலங்காரம் செய்து, பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதன் பின் குண்டத்தில் விறகுகள் வைத்து தீ வைக்கப்பட்டது. பின்னர் அதிகாலையில் பூஜைகள் செய்து முதலாவதாக பூசாரிகள் குண்டத்தில் இறங்கினார்.
அதனைத்தொடர்ந்து வேண்டுதல் வைத்திருந்த பக்தர்கள் வரிசையாக குண்டத்தில் இறங்கி தங்களுடைய நேர்த்திகடன் செலுத்தினர். இந்த நிகழ்வில் உள்ளூர் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றியும் சாமி தரிசனமும் செய்து விட்டு சென்றனர்.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.