நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டத்தில் உள்ள மணியனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன்கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா கடந்த 1-ந் தேதி இரவு கட்டளையுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான அங்காளம்மன் சுவாமி சிங்க வாகனத்திலும், நடராஜ சுவாமி குதிரை வாகனத்திலும், மலர் அலங்காரத்துடன் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மயானம் சென்று கொள்ளை இடுதல், பாரிவேட்டை ஆடுதல் மற்றும் இரத்த சோறு உண்ணுதல் போன்ற நிகழ்வு மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
இதில் பாரி வேட்டை நிகழ்ச்சியின் போது அங்காளம்மன் சுவாமி சிங்க வாகனத்திலும் நடராஜ சுவாமி குதிரை வாகனத்திலும், மலர் அலங்காரத்துடன் பக்தர்கள் கைகளில்தூக்கி கொண்டு ஊர்வலம் வந்தனர்.
அப்போது இருவரில் யார் சக்தி வாய்ந்தவர் என்று போட்டி போட்டுக்கொண்டு அளவீடு செய்யும் நிகழ்வில் அங்காளம்மனே இறுதியில் வெல்லும் பாரி வேட்டை ஆடுதல் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் போது சுவாமிகள் மீது வழிநெடுகிலும் உப்பு மற்றும் மிளகு சூறையிட்டு வழிபட்டனர்.
இதுகுறித்து கோயிலைச் சார்ந்தவர்களிடம் பேசுகையில், “வருடாவருடம் தவறாமல் இங்கு திருவிழா நடந்து வருகிறது. இக்கோயில் எங்கள் ஊரின் காவல் தெய்வமாக இருக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பாரி வேட்டை ஆடுதல், அம்பு எய்தல், போன்ற நிகழ்வு சிறப்பாக நடைபெறும். மேலும் குழந்தை இல்லாதவர்கள், நீண்ட காலமாக தவம் இருந்தும் குழந்தை பாக்கியம் கிடைக்க பெறாமல் இருப்பவர்கள் திருவிழாவின் போது இங்கு தரும்ரத்தசோற்றை உண்டால் நிச்சயமாக குழந்தை பிறக்கும் என்று நம்புகிறோம்.
இதனால்தான் இக்கோயில் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக உள்ளது என்று தெரிவித்தனர்.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.