நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் பெரியபாவடி என்னும் இடத்தில் தங்கவேல் என்பவர் தன்னுடைய மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து வீட்டிலேயே மாடித்தோட்டம் ஏற்படுத்தியுள்ளார். 50 க்கு மேற்பட்ட செடி வகைகள் வெற்றிகரமாக வளர்த்துவருகிறார். அதுவும் மண் இல்லாமலேயே செடி, கொடிகளை வளர்ப்பதா என்ற ஆச்சர்யத்தில் அவர்களை சந்தித்து பேசினோம்.
பெரும்பாலான மக்களிடம் மாடித்தோட்டம் அமைக்கும் ஆர்வம் இருந்தாலும்கூட அவற்றைச் சரியாக அமைப்பது எப்படி என்பது குறித்த தெளிவு இருக்காது. ஆனால், இந்த விஷயங்களைப் பின்பற்றினால் உங்கள் வீட்டு மாடியில் காய்கறிகள் மற்றும் பழங்கள் அறுவடை செய்யலாம் என்று இவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் உங்களுடைய வீட்டில் மாடித்தோட்டம் அமைப்பதால், இயற்கையாக கிடைக்கும் காய்கறி மற்றும் பழங்களை தாங்களே பறித்து சாப்பிட முடியும். அதோடு, மூலிகைச் செடிகளை வளர்ப்பதன் மூலம் இயற்கை மருத்துவத்தை பெறலாம். பசுமை நிறைந்த செடிகள் மாடியில் வளருவதால் வீடும் குளிர்ச்சியாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
தொடர்ந்து தங்கவேல் கூறுகையில், ”நாங்கள் கடந்த 5 வருடங்களாக மாடித்தோட்டம் அமைத்து பராமரிப்பு செய்து வருகிறோம். முதலில் எங்கள் வீட்டு பயன்பாட்டுக்கு தான் ஆரம்பித்தோம். தற்போது இதனுடைய பலன்கள் தெரிந்து தொடர்ந்து செய்து வருகிறோம். தற்போது மண்ணில்லா விவசாயம் மூலம் "அக்சயா மாடித்தோட்டம்” என்று தொடங்கி மக்களுக்கும் இதைப்பற்றி தெரிவித்து வருகிறோம். அதாவது, மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு, தேங்காய் நார்கள் மட்டும் பயன்படுத்தி செடிகளை வளர்ப்பதாகும்.
முதலில், இதனை சரியாக பயன்படுத்தி வைத்து விட்டால் ஒரு சில ஆண்டுகளிலே நமக்கு பலன்கள் தெரிய ஆரம்பித்து விடும். தற்போது நாங்கள் இஞ்சி, மஞ்சள், என ஆரம்பித்து கீரைகள் வகைகள் முதல் பழங்கள், காய்கறிகள், மூலிகை செடிகள் வரை வைத்துள்ளோம். அதுமட்டுமின்றி செவ்வாழை மரம்,சோளம், என நம்ம ஊரில் கிடைக்க பெறாத செடி வகைகளும் வைத்து வெற்றிகரமாக வந்து கொண்டு இருக்கிறது.
மேலும் இதை வைப்பதற்கு பெரியளவிலான இடங்கள் தேவைப்படாது. 10க்கு 10 சதுர அடியிலான இடம் இருந்தால் போதும். நம் வீட்டிற்கு தேவையான காய்கறி பழங்களை இயற்கை முறையில் நாமும் விளைய வைத்து, அறுவடை செய்து சத்தான உணவுகளை உட்கொள்ள முடியும்” என்று தெரிவித்தனர்.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.