தனது 3 வயது குழந்தையை ஸ்கூட்டியில் வைத்துக் கொண்டவாறே நகர்ப் பகுதியெங்கும் Zomato நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறார் சசிரேகா. தமுக்கம் பகுதியில் அவரைச் சந்தித்தோம்.
"சொந்த ஊர் மதுரை. கணவர் கார்த்திகேயனுக்கு தூத்துக்குடி. மதுரை எச்.சி.எல்.,லில் வேலை செய்கிறார். எங்களுக்கு காதல் திருமணம். எங்கள் குழந்தை ஹாஷினி.
நான் மெடிக்கல் பணி பார்த்துட்டு இருந்தேன். பெண்கள் எந்த வேலை செய்தாலும் அவர்களை தவறாக அணுகுவது எல்லா இடத்திலும் பெரும்பாலும் நடக்கிறது. அப்படி நடக்காத ஒரு பணி இது. நினைச்சா வேலைக்குப் போவேன், மனநிலை சரியில்லைன்னா விட்டுருவேன்.
எப்படியும் மாசம் 4,000 ரூபாய் கைக்கு வருது. குடும்பத்துக்கு என் பங்கு இவ்வளவு. இந்த வேலைக்கெல்லாம் பெண்கள் வரலாமான்னு கேட்டாங்க. பெண்கள் ஏன் வரக்கூடாது. எனக்கு இங்க எந்தப் பிரச்னையும் இல்ல.
வாகனம் ஓட்டுவது சிரமாக இருக்கும். நாம் சரியாக சென்றாலும் எதிரில் வருவோர் விபத்து ஏற்படுத்த வருவார்கள். அவசரத்திற்கு கழிப்பறைக்கு செல்ல முடியாதது மற்றொரு பிரச்னை. மற்றபடி வேறு பிரச்சனை ஏதும் இல்லை. வேலைக்காக யாரையும் அனுசரித்துப் போக வேண்டியது இங்கே இல்லை.
ஞாயிறு, திங்கள் கிழமைகளில் சரியாக பணம் வந்துவிடும். பைக் ரைடிங் பிடிக்கும், விரும்பிச் செய்கிறேன். குழந்தை சனி, ஞாயிற்றுகிழமைகளில் என்னோடு இருப்பாள். சமீபத்தில் கணவருக்கு கால் உடைந்ததால் குழந்தையை அவரால் பார்த்துக் கொள்ள முடியல.
இவளை நானே பார்த்துக்கிறேன். என்கூடவே கூட்டிப் போகிறேன். என்னோடு பணி செய்கிறவர்கள் இவளை பார்த்துக் கொள்கிறார்கள்.
காவலர் கனவு:
என்னுடைய கனவு, காவலராவது. தேர்வெழுதி தவறவிட்டேன். அடுத்த மாதம் தேர்வு வருகிறது. வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு அம்மா அப்பா யாரும் இல்லை. கணவர் தான் எனக்கு எல்லாம். அவர் உள்ளவரை எனக்கு மகிழ்ச்சியே.
பெண்கள் தங்களுக்குப் பிடித்த துறையில் பணி செய்தால் போதும். பிரச்னை வந்தால் சோர்ந்திட வேண்டாம், தைரியம் வேண்டும், பிரச்னையை எதிர்கொண்டால் தான் தீர்வு கிடைக்கும், பெண்கள் தயவு செய்து வெளியே வாங்க" என்கிறார் சசிரேகா.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.