மதுரை கலெக்டர் அலுவலகத்தின் சுற்றுப்புற பகுதிகளில் குப்பை கூளங்கள் அதிகம் தேங்கிக் கிடந்தன. அதனை சுட்டிக் காட்டி அந்தப் பகுதிகள் முழுக்கவே சுத்தம் சுகாதாரம் பராமரிக்கப்பட வேண்டும் என கலெக்டர் அனீஸ் சேகர் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாநகராட்சி ஊழியர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக அங்கு பாழடைந்த கட்டடத்தின் அருகே குப்பை கூளங்களை அகற்றும் பணி இன்று காலை நடந்தது.
அப்போது குப்பையில் இருந்து திடீரென ஒரு சாரைப் பாம்பு வெளிப்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி ஊழியர்கள், இது தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தல்லாகுளம் தீயணைப்பு அலுவலர் (போக்குவரத்து) வேல்முருகன் தலைமையில் வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அரை மணி நேர தேடலுக்கு பின், கட்டிட இடிபாடுகளில் மறைந்து கிடந்த சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் லாவகமாக பிடித்தனர்.
பிடிபட்ட பாம்பை தீயணைப்பு வீரர்கள் வனத்துறையிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில் துப்புரவு பணியின் போது பாம்பு கண்டெடுத்தது பொதுமக்கள் மத்தியில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விரைவில் குப்பை, இடிபாடுகள், பழைய பொருள்கள் ஆகியவற்றை அகற்றி கலெக்டர் அலுவலக வளாகத்தை மிகவும் தூய்மையாக பராமரிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற ஆபத்துகள் நேராது என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.