மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழித்தடத்தில் சிலைமானை அடுத்துள்ளது திருப்புவனம். சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட இந்த ஊரில் மாசி உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது.
புகழ்பெற்ற எல்லைகாத்த மாரியம்மன் கோயில் திருவிழாவும் அதைத் தொடர்ந்து பாடல்பெற்ற தலமான பூவணநாதர் திருக்கோயில் தேரோட்ட திருவிழாவும் அடுத்தடுத்து நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு எல்லை மாரியம்மன் கோயில் மாசி திருவிழா பிப்.24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல், பால் குடம் என பல்வேறு நேர்த்திக் கடன் செலுத்தி வந்தனர்.
விழாவின் உச்சமாக மார்ச் 4 -ம் தேதியன்று மாரியம்மன் கோயிலில் தேர் உற்சவம், தீச்சட்டி, மாவிளக்கு உள்ளிட்டவை வெகு சிறப்பாக நடைபெற்றன. விடிய விடிய விழா நடந்தது. தென் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர்.
கோயிலின் எதிரில் சாலையோரம் அமைந்த திடலில் ராட்டினம், கண்காட்சி உள்ளிட்டவை அமைக்கப்பட்டு இருந்தன. கொரோனா ஊரடங்கு நெருக்கடிகளால் கடந்த இரண்டு ஆண்டுகளாக களையிழந்து போயிருந்த இந்த கோயில் மற்றும் திடல் பகுதி ஊரடங்கு தளர்வுகளால் மீண்டும் களை கட்டியது.
பெரிய கோவில் திருவிழா தொடக்கம்:
மாரியம்மன் கோயில் திருவிழா நல்லபடியாக நிறைவடைந்து தீர்த்தவாரியுடன் முடிவடைந்த நிலையில் நாளை மார்ச் 9-ம் தேதி திருப்புவனம் அருள்மிகு பூவணநாதர் திருக்கோயில் மாசி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சௌந்திரநாயகி அம்மன் சமேத புஷ்பவனநாதர் கோயிலின் இந்த பிரமோற்சவத்தில் திருக்கல்யாணம் மார்ச் 16 -ம் தேதியும், திருத்தேரோட்டம் மார்ச் 17-ம் தேதியும் நடைபெற உள்ளது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.