தென் மாவட்ட மக்களின் கனவுத் திட்டங்களுள் ஒன்று
மதுரை -
தூத்துக்குடி இரட்டை அகல ரயில் பாதை. தொழில்துறை வளர்ச்சிக்கு பெரிதும் வித்திடும் வகையில் இந்த திட்டம் அமையும் என்பது வல்லுநர்கள் கணிப்பு.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்குகள் விரைவாக கொண்டு செல்வதற்கும், பயணிகள் தென்மாவட்டங்களில் தங்கு தடையின்றி ரயில் பயணத்தை மேற்கொள்வதற்கும் இந்த திட்டம் பயன்படும் என்பது உறுதி.
கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு திட்டம் அறிவித்து பணியை தொடங்கியது. மதுரை முதல் தூத்துக்குடி வரை எல்லாப் பகுதிகளிலும் பணிகள் பெரும்பாலும் முடிவடைந்த நிலையில் மதுரை - திருமங்கலம் இடையில் மட்டும் பணிகள் மீதம் உள்ளன.
தொடக்கம் முதலே இந்தப் பகுதி பணியில் ஏற்பட்ட சுணக்கம் மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தற்போது தொழிலாளர்கள் மூலம் பணி வேகம் எடுத்துள்ளது.
தற்போது ரயில்வே கேட்டுகளை மூடி சாலையை அடைத்து வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டு ரயில் பாதை மற்றும் சாலை இணைப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் பாதைப் பணிகள் முடிந்ததும் ஆய்வு செய்து தண்டவாளங்கள் பொருத்தும் பணி தொடங்கும். பணிகள் மொத்தம் முடிவதற்கு குறைந்தபட்சம் ஆறு மாத காலமும், இரண்டாவது அகல ரயில் பாதை பயன்பாட்டுக்கு வருவதற்கு ஓராண்டு காலமும் ஆகலாம் என அங்கு பணியில் இருந்த காண்டிராக்ட் மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களை மற்ற நகரங்களோடு இணைக்கிறது மதுரை சந்திப்பு. இத்தனை காலம் சிக்னல்களுக்காக காத்திருந்து நேர விரயம் ஆகிக் கொண்டிருந்த ரயில்கள் இனி தத்தம் பாதையில் விரைந்து செல்லும்.
ஏற்கனவே சென்னை - மதுரை இடையே இரட்டை அகல மின்மய பாதை உள்ளது. தற்போது நடைபெறுகிற இந்தப் பணிகளும் நிறைவடைந்தால் தமிழகத்தின் தலைநகரும் கடற்கரை கோடியில் உள்ள துறைமுக நகரும் இரட்டை கோட்டில் இணையும். இதனால் வேலை வாய்ப்பு, பொருளாதாரம், தொழில், நகரக் கட்டமைப்பு எல்லாம் உயரும்.
விரைந்து பணிகள் முடித்து ரயில் பாதையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே மக்களது வேண்டுகோளாக உள்ளது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.