மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் நீரில் மூழ்கி இளைஞர் பலி. தற்கொலையா? விபத்தா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் இன்று காலை 7.30 மணியளவில் இளைஞர் ஒருவர் கரையில் நின்றுள்ளார். அவர் திடீரென மேல் சட்டையை கழட்டியவாறு குளத்தில் குதித்துள்ளார்.
இதனை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அவர் ஏதோ நீச்சலடித்து குளித்துக்கொண்டிருப்பதாககருதியுள்ளனர். ஆனால் சிறிது நேரத்தில் அந்த நபர்கைகளை மேலே ஆட்டி ஆபத்து என்பதை குறிக்கும் வகையில் சைகை செய்யவே பதறிய பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையிலான அனுப்பானடி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் குளத்தில் குதித்த அந்த நபர் நீரில் மூழ்கி இறந்துள்ளார். உடனடியாக அவரது உடலை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.
மதியம் 12.30 மணி வரை சுமார் 5 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு அந்த நபரின் உடல் தெப்பக்குளத்தில் இருந்து மீட்கப்பட்டது. இறந்தவரின் உடலை தெப்பக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் தமிழரசனிடம் தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்தனர். இறந்த நபர் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் சுமார் 36 வயது இளைஞரான கோபிநாத் என்பது தெரியவந்துள்ளது. ஐராவதநல்லூர் பகுதியைச் சேர்ந்தவரான கோபிநாத் கொத்தனார் பணி செய்து வந்ததாக தெரிகிறது. இவர் எதற்காக குளத்தில் குதித்தார் என்பது தற்போது வரையிலும் தெரியவரவில்லை.
தெப்பக்குளத்தில் யாரும் இறங்கக் கூடாது என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் திடீரென ஒருவர் குளத்தில் குதித்து நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன் - மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.