மதுரை நகரின் முக்கிய நீராதாரம் வைகை. நீரைத் தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு அரசும் மாநகராட்சியும் திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் பொதுமக்கள் பொறுப்பின்றி குப்பைகளை ஆற்றுக்குள் வீசுகின்றனர்.
மக்கள் ஆற்றுக்குள் வீசிய குப்பைகள் நதியின் ஓரங்கால்கள் முழுக்க தேங்கி வைகை நதி என்பது குப்பை நதி எனச் சொல்லும் அளவிற்கு ஆகி நிற்கிறது.
கழிவுகளை சுத்திகரித்து ஆற்றில் கலப்பதற்கு பல ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில் மக்களின் இந்த செயல்பாடு கண்ணீரை வரவழைக்கிறது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அதிகமான பிளாஸ்டிக் குப்பைகள் மொத்தமாக ஆற்றையே அடைத்தபடி மிதக்கின்றன. இது ஆற்றுக்கும், மண்ணுக்கும், மக்களுக்கும், பிற உயிர்களுக்கும் கேடு. ஏராளமான மீன்கள் உற்பத்தியாகும் வைகை நதியில் இதுபோல குப்பைகள் குவிந்துள்ளதால் மீன்களுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இந்த நதிக்குப் பேர்போன மாநகரின் மக்களே அசுத்தம் செய்யலாமா எனவும் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஈசன் படியளக்கும் இந்த புண்ணிய பூமியில் நாமே சிற்றுயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தலாமா என ஆன்மீக அன்பர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.