திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே TPK சாலையில் ஆட்டோவின் பின்னால், ஆட்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த ஷேர் ஆட்டோ மோதி விபத்து ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பு.
மதுரை திருப்பரங்குன்றம் வழியாக திருமங்கலம் செல்லும் TPK சாலையில் கடந்த 2ம் தேதி காலை 11:50 மணியளவில் ஆட்டோ ஒன்று சாலை ஓரம் மெதுவாகச் சென்று கொண்டிருந்தது.
ஓட்டுநர் ஆட்டோவை மெதுவாக ஓட்டிச் சென்றபோது, அவருக்குப் பின்னால் மூன்று பயணிகளுடன் அதிவேகமாக வந்த ஷேர் ஆட்டோ முன்னால் சென்ற ஆட்டோவின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.
ஆட்டோக்கள் இரண்டும் தலைகுப்புற கவிழ்ந்தன. இதில், முன்சென்ற ஆட்டோவில் கேஸ் வெளியே கசியத் தொடங்கியது. உடனே அருகில் இருந்தவர்கள் ஆட்டோவில் இருந்த நபர்களை மீட்டனர். எரிவாயு கசிவதை நிறுத்த உதவினர்.
அருகில் இருந்தோர் உதவியால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த எதிர்பாராத விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணித்த மாற்றுத்திறனாளி உள்ளிட்ட மூன்று பேர் மற்றும் இரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு காவல்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. சம்பவ இடத்தின் அருகே இருந்த கடையின் சிசிடிவியில் விபத்து காட்சி தெளிவாக பதிவாகி இருக்கிறது.
தற்போது விபத்து நடைபெற்ற சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் தொடர்ச்சியாக திருப்பரங்குன்றம் சாலையில் டூவீலர், ஆட்டோ என விபத்துகள் தொடர் கதையாகி உள்ளது மக்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.