தமிழகத்தில் மேயர், நகராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றுவரும் சூழலில், திருமங்கலம் நகராட்சித் தலைவர் தேர்தலில் வாக்களிக்க 13 உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதையடுத்து குறைவெண்வரம்பு (quorum) இல்லாத காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்து வெற்றி பெற்ற அனைவரும் இரண்டாம் தேதி பதவி ஏற்ற நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் பெயர் நேற்று மாலை வரை அறிவிக்காததால் வேட்பாளர் யார் என பரபரப்பு நிலவியது. திருமங்கலம் 13வது வார்டில் வெற்றி பெற்ற திமுக நகர பொறுப்பாளர் முருகனின் மருமகள் ஷர்மிளாவும், 6வது வார்டில் வெற்றிபெற்ற திருமங்கலம் திமுக நகர இளைஞரணி செயலாளர் முத்துக்குமாரின் மனைவி ரம்யாவும் தலைவர் பதவி கேட்டு தொடர்ந்து கட்சி மேலிடத்தில் கோரிக்கை விடுத்ததால் காலை முதல் வேட்பாளர் யார் என தொடர்ந்து இழுபறி நீடித்தது.
திருமங்கலம் நகர் மன்ற தலைவர் பதவிக்கு 6வது வார்டில் வெற்றி பெற்ற மு.ரம்யா (36) வேட்பாளராக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டார். இதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்த நகர பொறுப்பாளர் முருகன் தனது ஆதரவாளர்களுடன் தலைவர் பதவிக்கு ஷர்மிளா வேட்புமனு தாக்கல் செய்வார் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி டேரன்ஸ் லியோனிடம் ஷர்மிளா வேட்மனு தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சிக்கு நகராட்சி தலைவர் பதவி: தலைமறைவான கவுன்சிலர்கள்... செல்போன்கள் சுவிட்ச் ஆப்...
10 மணிவரை ரம்யா வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதிமுக கவுன்சிலர்கள் 6 பேர் தேர்தலை புறக்கணிப்பு செய்தனர் இதனால் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட மொத்தம் 27 வார்டுகளில் தலைவர் தேர்வுக்கு 14 பேர் தேவை என்பதால் சர்மிளா ஆதரவாளர்கள் 12 பேர், தேமுதிக கவுன்சிலர் ஒருவர் உட்பட 13 பேர் மட்டுமே வந்ததால் பெரும்பான்மை இல்லை எனக் கூறி தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி டெரன்ஸ் லியோன் அறிவித்தார்.
செய்தியாளர்: சிவக்குமார் - திருமங்கலம்
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.