Home /local-news /

'ஒற்றை மகனின் எதிர்காலமே இவரது  உலகம்' - செருப்புத் தைக்கும் தொழிலாளியின் கதை

'ஒற்றை மகனின் எதிர்காலமே இவரது  உலகம்' - செருப்புத் தைக்கும் தொழிலாளியின் கதை

ஒற்றை மகனின் எதிர்காலமே இவரது  உலகம்

'ஒற்றை மகனின் எதிர்காலமே இவரது  உலகம்' - செருப்புத் தைக்கும் தொழிலாளியின் கதை

பேரம் பேசும் போது சங்கட்டமா இருக்கும். கேட்ட கூலி தரலைன்னா தைக்க மாட்டேன். எனக்கு சந்தோஷமே கிடையாது. துக்கம்தான். மனைவி இருந்தா மகனுக்கு கல்யாணம் முடிச்சிருப்பா.

    துரை தல்லாகுளம் பெருமாள் கோயில் எதிரில் ஒற்றைப் புளிய மரம். அந்த மரநிழல் மதுரை மக்களுக்கு சுகமானது. சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து செல்லும் போது இந்த மரம்தான் இளைப்பாறுதல் தரும். இந்த மரம் தருகிற இன்னொரு அற்புதமும் உண்டு.

    அது செருப்பு தைக்கும் தொழிலாளி தங்கராஜ். பல ஆண்டுகளாய் அதே இடத்தில் பகல் முழுவதும் உட்கார்ந்திருப்பவர். அந்தச் சாலையில் வேறெங்கும் அவசரத்திற்கு செருப்புத் தைக்க வாய்ப்பில்லை. தக்க நேரத்திற்கு உதவுபவராய் அமர்ந்திருப்பார்.

    அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். \"எனக்கு வயசு 65. ஜவகர் வீதியில் இருந்து வர்றேன். அப்பா காலத்தில் இருந்து இந்த தொழில் தான். என்னோட 18 வயசுலலாம் செருப்பு தயாரிச்சிக்கிட்டு இருந்தோம். இப்போ செருப்பு நிறுவனங்கள் வர வர, நாங்க செருப்பு தைக்கிறதோட நிறுத்திக்கிட்டோம்.

    எனக்கு வேற தொழில் தெரியாது. அம்மா, அப்பா இல்ல. என்னோட தங்கச்சி மகளை கட்டிக்கிட்டேன். அவ இந்த கொரோனாவால மரணம். நானும் 32 வயசு பையனும் மட்டும்தான் இப்போ. பையன் இரண்டாவதுதான் படிச்சிருக்கான்; கூலி வேலை செய்யுறான்.

    எம்.ஜி.ஆர்., படம்ன்னா பிரியம். மனைவிக்கு வீட்டு வேலை பிடிக்காது. தொழில் செஞ்சு சம்பாதிச்சிட்டு இருந்தா. இப்போ அவ இல்ல. ஒத்த மகனுக்கு நல்லது செஞ்சு பார்க்க வழி தெரியாம கெடக்கேன்ய்யா.

    பேரம் பேசும் போது சங்கட்டமா இருக்கும். கேட்ட கூலி தரலைன்னா தைக்க மாட்டேன். எனக்கு சந்தோஷமே கிடையாது. துக்கம்தான். மனைவி இருந்தா மகனுக்கு கல்யாணம் முடிச்சிருப்பா. பெண்களுக்குத் தர்ற லோன் வாங்கி கொஞ்சம் பொழப்பு நடத்துனோம்.

    அவ இல்லாம போனதும் அதுவும் இல்ல. எப்படியாச்சும் மகனுக்கு கல்யாணம் பண்ணனும். என்ன கஷ்டப்பட்டாச்சும் வர்ற பேரப் பிள்ளைகள படிக்க வச்சிரணும். அதுங்கள ஆபீசர்களா ஆக்கணும்\" என்றார்.

    எப்போதும் போல ஒருவரைக் கடந்து செல்லும்போது அந்த நாள் வெறும் நாள். அவரிடம் அமர்ந்து அவர் கதையைக் கேட்கக் கேட்க அந்த நாள் சின்னதொரு திருப்புமுனைப் பொழுதாகவும் நமக்கு அமைந்து விடுகிறது. தங்கராஜின் வாழ்க்கைக் கதையில் நமக்குக் கிடைத்தது அடுத்தவர் வாழ்வுக்கான அனுபவப் பாடம்.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Arun
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி