மதுரையில் வழக்கத்திற்கு முன்னதாகவே கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. வழக்கமாக ஏப்ரலில் வெயில் வாட்டும் நிலையில் இந்தாண்டு மார்ச் மாதமே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.
தொடர்ந்து பல நாட்களாக வெயில் கொளுத்திவந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரைத் திருவிழா கொடியேற்றம் இன்று வெகு சிறப்பாக பக்தர்கள் அனுமதியோடு நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவின் முக்கியமான நாட்களில் மழை பெய்வது, வருண பகவானே வரம் கொடுப்பதாக மக்களின் தீராத நம்பிக்கை. திருவிழாவை காண வருணபகவானே வருவதாக ஐதிகம்.
கொடியேற்றம், திருக்கல்யாணம், எதிர்சேவை உள்ளிட்ட முக்கியமான நாட்களில் மழை வருவது ஆண்டுதோறும் எதிர்பாராது நிகழும் ஒன்று. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள்களில் தவறாது மழைவருவது யாராலும் கணிக்க முடியாத பேராச்சரியம்.
கொரோனா ஊரடங்கு தடையால் இரண்டு ஆண்டுகள் மிகப்பெரிய அளவில் சித்திரை திருவிழா கொண்டாடப்படாத நிலையில் இந்தாண்டு மூன்று ஆண்டுகள் கழித்து சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
இதனையொட்டி காலையிலிருந்து வெயில் சூட்டால் கொளுத்தியெடுத்த வானம் திடீரென கருமேகங்களைக் கொண்டுவந்து மதுரை மண்ணெங்கும் கொட்டியது.
மதுரை கோரிப்பாளையம், தல்லாகுளம், புதூர், சர்வேயர் காலனி, மூன்றுமாவடி உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் மண்வாசத்தோடு சில நிமிடங்கள் மழை பொழிந்தது.
சரியாக இன்று மதியம் 2.45 மணிளவில் கருமேகங்கள் சூழ்ந்து வானம் இருளத் தொடங்கியது. சற்றுநேரத்தில் மக்களை மகிழ்விக்க மழை பொழிந்தது.
இந்தாண்டு கோடை வெப்பத்தை தணிப்பதற்கு கோடைமழை பொழிய வேண்டும் என்ற மக்கள் நம்பிக்கை பொய்த்துப் போகாது எனலாம். வழக்கமான கிராமத்து நம்பிக்கையின்படி எதிர்சேவை மழையை எதிர்பார்க்கலாம்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.