டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்தி
சென்னை குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெற்றதோடு முதல்வரின் ஆணைக்கிணங்க
மதுரை நகருக்கு அந்த அலங்கார ஊர்தி வருகை புரிந்துள்ளது.
மதுரை நகருக்கு வந்து சேர்ந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்கு நிறுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் மூன்று நாள் நிகழ்ச்சிகள் தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் வாயிலில் நடைபெறுகிறது.
சிவப்புக் கம்பளம், மின் விளக்குகள், போக்குவரத்து மாற்றம், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு, எளிய மேடை என பல்வேறு ஏற்பாடுகளோடு இந்த அலங்கார ஊர்தி கண்காட்சிக்காக வைக்கப்பட்டு உள்ளது. மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த அலங்கார ஊர்தியை பார்ப்பதற்காக கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
ரத்து செய்யப்பட்ட தெப்பத்திருவிழா நடைபெறுவதைப் போல இந்தக் காட்சி அமைந்துள்ளது. தெப்பக்குளம் பகுதியில் மக்கள் ஷேர் ஆட்டோ, பேருந்து, டூவீலர், கார் என பல்வேறு வாகனங்களில் வந்து இறங்கி இந்த அலங்கார ஊர்தியை பார்ப்பதற்காக நண்பகல் வேளையிலும் குவிந்து வருகின்றனர்.
முதியவர்கள் தொடங்கி குழந்தைகள் வரை குடும்பம் குடும்பமாக நண்பர்கள் உறவினர்கள் என ஏராளமானோர் இங்கு வந்து ஊர்தியை பார்வையிட்டு வருகின்றனர்.
குழந்தைகள், இவர்கள் யார்? இது எதற்காக? என கேள்விகள் கேட்கும் போது இயல்பாகவே பெற்றோர், பெரியோர்கள் குழந்தைகளுக்கு வரலாற்றை எடுத்துச் சொல்ல தொடங்குகின்றனர். இப்படி வரலாறு தலைமுறைகள் தாண்டி பரவுவதற்கு இந்த அலங்கார ஊர்தி கண்காட்சி மிகப்பெரிய ஊக்கியாக தற்போது அமைந்துள்ளது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.