மதுரை மீனாட்சி கோயிலில் ஆண்டின் எல்லா மாதங்களும் உற்சவங்கள் நடக்கும். அதில் தை, மாசி, சித்திரை, ஆடி, ஆவணி, கார்த்திகை ஆகிய ஆறு மாதங்களில் நடக்கும் உற்சவங்கள் மட்டுமே கொடியேற்றத்துடன் நடைபெறும்.
மீனாட்சி கோயிலில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி என இரண்டு கொடிமரங்கள் உள்ளன. ஆறு மாதங்களில் ஆடி முளைக்கொட்டில் மட்டுமே மீனாட்சி கொடிமரத்தில் கொடி ஏறும். மற்ற ஐந்து மாதங்களும் சுவாமி கொடிமரத்தில்தான் கொடியேற்றம் நடத்தப்படும்.
அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி என்பதால் ஆடி உற்சவத்தில் அம்மனுக்கு முக்கியத்துவம் தந்து அம்மன் சன்னதி கொடியேற்றம் நிகழ்கிறது. தை தெப்போற்சவம், மாசி பிரமோற்சவம், சித்திரைப் பெருவிழா, ஆவணி புட்டுத் திருவிழா, கார்த்திகை உற்சவம் அனைத்திலும் சுவாமி கொடிமரத்தில் கொடியேற்றம்.

மீனாட்சியம்மன்
மாசி பிரமோற்சவமா... காரணம் உண்டு. இப்போது வரையிலும் மீனாட்சி கோயிலின் பிரமோற்சவம் மாசியில்தான். நாற்பத்தெட்டு நாள்கள் உற்சவம் நடக்கும். விநாயகர், முருகர், மூவர், சந்திரசேகர் என ஆறு ஆறு நாள்கள் அந்த உற்சவங்கள் அத்தனை மூர்த்தங்களுக்கும் நடக்கும். சித்திரைத் திருவிழா என்பது மீனாட்சி கோயிலின் சிறப்புநிலை உற்சவம்.

மீனாட்சியம்மன் கோவில் கொடியேற்றம்
சரி, கொடிமரத்திற்கு திரும்புவோம். மனித உடலின் முதுகெலும்பை போலவே 32 கணுக்கள் கொண்டது கொடிமரம். மனித வடிவாக தத்துவார்த்த ரீதியில் இந்தக் கொடிமரம் காட்சி தருகிறது. கொடிமரத்தை வணங்கினால் மூலவரை வணங்கிய பாக்கியம் என்பர். நின்று வணங்காமல் வலம் வந்து வணங்குதல் ஆகமவிதி என்கின்றனர்.
கொடிமரம் இறைவன். கொடியேற்றும் கயிறு, சக்தி. கொடியாகப் பயன்படும் துணி ஆத்மா. தர்பைக் கட்டு என்பது பாசம். ஆன்மாவை பாசக் கட்டிலிருந்து விடுபடச் செய்து மனதை பலியிட வேண்டும் என்பதற்கே கொடிமரம் முன்பு பலிபீடம். இவ்வாறு சைவ தத்துவம் அடங்கியுள்ளது இந்தக் கொடியேற்றத்தில்.

மீனாட்சியம்மன்
சுவாமி சன்னதி கொடிமரத்தில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. ஓதுவார்கள் கொடிக்கவி பாடி வணங்குவர். மங்கல வாத்தியங்களும் சங்கநாதங்களும் பக்தர்களின் பக்தி கோஷங்கள் முழங்க ரிஷபம் முதல் அஸ்திரதேவர் வரை உருவங்கள் பொறிக்கப்பட்ட கொடி பூஜையாகி சுவாமி சன்னதி கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது.
சித்திரைத் திருவிழா வெறும் திருவிழாவா என்ன? அறிவியல் கோட்பாட்டை உள்ளடக்கிய ஆன்மிக விளக்கம். உயிர்களின் பரிணாம வளர்ச்சியை விவரிக்க முன்னோர்கள், பெரியோர்கள் செய்திருக்கும் ஏற்பாடு. சித்திரைத் திருவிழாவிற்கும் சயின்ஸ்க்கும் உள்ள தொடர்பை விளக்குகிறேன்...
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.