Home /local-news /

முகலாயர், கட்டபொம்மன், நாயக்க மன்னர்... வரலாறு பேசும் 'நகரா மண்டபம்!' - #மதுர_சீரிஸ்

முகலாயர், கட்டபொம்மன், நாயக்க மன்னர்... வரலாறு பேசும் 'நகரா மண்டபம்!' - #மதுர_சீரிஸ்

Nagara Mandapam - Madurai

Nagara Mandapam - Madurai

Madurai Chithirai Thiruvizha Series | பேரிகை, முரசு, தமுக்கு, பறை, கொம்பு, தாரை, தப்பட்டை போன்ற அறிவித்தல் இசைக்கருவி பட்டியலில் நகராவும் ஒன்று. 'நகரா' பழந்தமிழர் வாழ்வில் நீங்கா இடம்பெற்ற ஒருமுக தோல் கருவி; முரசின் மூதாதை வடிவம்.

மேலும் படிக்கவும் ...
  மீனாட்சிகோயில் கிழக்கு கோபுர அம்மன் சன்னதி வாயில் எதிரில் 'நகரா மண்டபம்'. அறியாதோர், மண்டபம் நகராது இருப்பதால் இப்பெயர் என நினைத்து நகர்வார்கள். கோயில் பகுதியில் வசிப்போருக்கே தெரியும் இது 'நகரா முரசு' இசைக்கும் மண்டபம் என்பது.

  பேரிகை, முரசு, தமுக்கு, பறை, கொம்பு, தாரை, தப்பட்டை போன்ற அறிவித்தல் இசைக்கருவி பட்டியலில் நகராவும் ஒன்று. 'நகரா' பழந்தமிழர் வாழ்வில் நீங்கா இடம்பெற்ற ஒருமுக தோல் கருவி; முரசின் மூதாதை வடிவம்.

  நகரா செல்வாக்கோடு இருந்த முகலாய மன்னர்கள் காலத்தில் அவர்கள் அறிவிப்புக்கான நகராவை இசைக்கானதாக மாற்றினார்கள். பிரபல முகலாய இசை வடிவ 'நவ்பத் கானா'வின் ஒன்பது இசைக் கருவிகளில் நகராவும் ஒன்று.

  நவ்பத் கானா அக்பர் அரசவையில் இடம்பெற்றது. அதன் இசையில் அக்பர் மட்டுமல்ல; நம் திருமலை நாயக்கரும் சொக்கினார். சொக்க வைக்கும் நவ்பத் கானாவை தினசரி கேட்க நாயக்கருக்கு பேராவல். முகலாய அரசவை இசைக் கலைஞர்களில் ஒரு குழுவைப் பெறுகிறார்.

  குழுவை தனது மதுரை அரண்மனை பகுதியில் குடியமர்த்தி அவ்வப்போது அந்த இசைகேட்டு மகிழ்ந்தார். அந்த இசைக்குழு வாழ்ந்த தெரு, இப்போதும் மதுரையில் 'நவ்பத் கானா தெரு' என அழைக்கப்படுகிறது.

  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு அபிஷேகம் நடந்த பின்னரே, உணவு உட்கொள்ளும் வழக்கம் நாயக்கருக்கு. தம் அரண்மனையில் இருந்தபடி அபிஷேகச் செய்தி அறிய சிந்தித்தார். மதுரை முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் வரை தூர இடைவெளிக்கு ஒன்றாக, சாலையோரம் ஐம்பதுக்கும் மேல் நகரா மண்டபங்கள் அமைத்தார்.

  அபிஷேகத்தின்போது அடுத்தடுத்து நகரா அடித்து, இறுதியாக ஒலி அரண்மனைக்கு கேட்கும். அதன்பின்பே உணவு கொண்டார் நாயக்கர். வீரபாண்டியக் கட்டபொம்மனும், திருச்செந்தூர் முருகன் அபிஷேகமானதுமே, உணவருந்துவார். அதற்காக பாளையங்கோட்டை முதல் திருச்செந்தூர் வரை நகரா மண்டபங்கள் அமைத்தார்.

  இந்த மண்டபங்கள் அத்தனையும் அந்தந்த வழித்தடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதிலமடைந்து, காலத்தின் மவுன சாட்சிகளாகக் காட்சியளிக்கின்றன. திருக்குறள், சிலப்பதிகாரம் மற்றும் பல இலக்கியங்களில் முரசு பற்றிய குறிப்புகள் கிடக்கின்றன.

  மக்களுக்கு யானை மீது முரசடித்து செய்தி அறிவித்தனர். பெருஞ்சேரல் இரும்பொறை முரசுக்கட்டிலில் படுத்த மோசிக்கீரனாருக்கு கவரிவீசிய வரலாறு உண்டு. நகராவும் முரசும் ஏறத்தாழ ஒன்றே!

  பெரிய அரைவட்ட மரப்பாண்டம்மீது முக்கால் தரம் கொண்ட எருமைக்கன்று தோலால் வார்க்கப்படுவதே நகரா. மன்னர் காலத்தில் புலியைவென்ற எருதின் தோலிலேயே, நகரா உருவாக்கினர். முன்காலத்தில் கோயில்களில் நகரா இசைப்பது மாறா மரபு.

  தற்போதும் காஞ்சி காமாட்சி கோயில், சங்கரன்கோயிலின் சங்கர நாராயணன் கோயிலில் நகரா இசைக்கப்படுகிறது. மதுரையிலும் மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகமாவதை உணர்த்தி நகரா மண்டபத்தில் அதிகாலையிலும் மாலையிலும் 4.30 மணி முதல் 5 மணி வரை நகரா இசைக்கப்படுகிறது.

  பழமையான வாத்தியங்கள் அருகிவரும் நிலையில் மீனாட்சி கோயிலில் இசை மரபு தொன்று தொட்டு தொடர்கிறது. மண்டபத்தில் நகரா வாத்தியமென்றால் கோயில் வாசலில் தொடங்கி ஊர்வலம் முழுக்க இரவெல்லாம் அதிருமே, தந்த தனக்கு தன தந்த தனக்கு தன தந்த தனக்கு தன தம்... வாத்தியம் வரும்...!

  செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
  Published by:Arun
  First published:

  Tags: Madurai, Madurai Chithirai Festival

  அடுத்த செய்தி