உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் முழுவதும் பெண்களைப் போற்றும் விதமாக பலரும் நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த வேளையில், கடந்தாண்டு மட்டுமே பெண்கள் மீது அவர்கள் வசிக்கும் வீட்டுக்குள்ளேயே நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்த மாவட்ட அளவிலான புகார்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்களை கேட்டிருந்தோம்.
ஆட்சியர் அலுவலகத்தின் மாவட்ட சமூகநல பாதுகாப்புத் துறை சார்பில் நமக்கு பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் 2021ஆம் ஆண்டில் மாவட்ட அளவிலான புகார் விவரங்களை நமக்கு அளித்தனர்.
மகளிருக்கு எதிரான குற்றங்களில் வன்கொடுமை பிரிவு, வரதட்சனை பிரிவு, மூத்த குடிமக்கள் பிரிவு என மூன்று பிரிவுகளின் கீழ் தரவுகள் கிடைக்கின்றன. இதில் வன்கொடுமை பிரிவில் கடந்தாண்டு மாவட்ட எல்லைக்குள் பதிவானது மட்டும் 166 புகார்கள்.
அடுத்தது பெண் வரதட்சனை கொடுமை தொடர்பாக மொத்தம் 179 புகார்கள். இதில் மணமான பெண்கள் வரதட்சனை கொடுமையால் விவாகரத்து உள்ளிட்டவற்றுக்கு ஆளாவதும், திருமணம் நிச்சயிக்கப்பட்டும் வரதட்சனை பிரச்சனைகளால் பெண் திருமணம் தடைபடுவது என பல்வேறு விதங்களில் வழக்குகள் பதிவாகின்றன.
அடுத்தது மூத்த குடிமக்கள் வன்கொடுமை பிரிவு. இதில் ஆண் பெண் இருபாலர் மீதான வன்கொடுமை என மொத்தம் 205 புகார்கள் என்றாலும் பெண்கள் மீதான வன்கொடுமைகளே இதில் அதிகம் என தகவல் தெரிவிக்கின்றனர் அதிகாரிகள்.
மேலும் 2021-ம் ஆண்டின் தரவு எண்ணிக்கைப்படி மூத்த குடிமக்கள் பிரிவு புகார்கள் டிசம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 33. இந்த எண்ணிக்கை 2021-ம் ஆண்டின் வேறு எந்த மாதத்திலும் வேறு எந்த பிரிவிலும் இல்லாத அளவுக்கு உயர்வைத் தொட்ட எண்ணிக்கை.
அது மட்டுமன்றி, ஆண்டின் மத்தியப் பகுதியான மே, ஜூன் மாதத்தில் மட்டுமே புகார்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
ஏப்ரல் மாதமும், ஆண்டின் பிற்பகுதியான ஜூலை முதல் டிசம்பர் வரையிலும் இந்த மூன்று பிரிவு புகார்கள் அதிகரித்து காணப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கின் தளர்வு காலம் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
சமூகநலப் பாதுகாப்புத் துறை அலுவலர் வாசுகியிடம் பேசிய போது, \"இஸ்லாமிய, சௌராஷ்டிர மக்கள் போன்ற ஆர்தொடாக்ஸ் குடும்பப் பின்னணியில் இருந்து வருகிற பெண்கள் நிறைய பேர் தங்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்து புகார் தர முன்வருகின்றனர். இதை ஆரோக்கியமான மாற்றமாக பார்க்கிறோம்.
கடந்தாண்டைப் பொறுத்தவரை கொரோனா ஊரடங்கில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் குறைவு. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உடல்வேதனையும் மனவேதனையும் அடைந்த பெண் மீதும் கூட வன்முறைகள் நிகழ்த்தப்பட்ட வழக்கு வந்துள்ளது என்பது வேதனை\" என்றார்.
குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால், சமூகவெளியை விடுத்து வீட்டுக்குள் பெண்ணுக்கு நேரும் சமூகவியல் குற்றச்சாட்டு புகார்களின் எண்ணிக்கை மட்டுமே இது. அதிலும், புகார்களாய் பதிவானது இவ்வளவு என்றால், புகார்தர முன்வராததால் மூடி மறைக்கப்பட்டவை எத்தனையோ.. மாறட்டும் இந்நிலை மகளிருக்கு.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.