Home /local-news /

'சின்ன வயசுல இருந்து உழைக்கிறேன், உழைப்பேன்' - 85 வயது இளநீர்க் கடை தாத்தா!

'சின்ன வயசுல இருந்து உழைக்கிறேன், உழைப்பேன்' - 85 வயது இளநீர்க் கடை தாத்தா!

Madurai

Madurai

Madurai: பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் என்மேல பாசம் வச்சு அன்பா இருக்காங்க. ஆனா நான் அவங்க ஆதரவ எதிர்பார்க்காம சுயமா நிற்கத்தான் விரும்புறேன்

  மூன்றுமாவடி ஈபிஜி ஸ்கூல் சந்து எதிரில் அய்யர்பங்களா சாலையில் வண்டியில் குவிந்து கிடக்கும் இளநீர்கள். தனது 85 வயதில் அசராமல் இளநீர் நறுக்கி வியாபாரம் செய்து வருகிறார் ஜெயப்பிரகாஷ். அவரிடம் பேசினோம்.

  சின்ன வயதில் இருந்தே உழைத்து சம்பாதிக்கிறது மனசில நின்னிருச்சு. யாரையும் எதிர்பார்க்காம வாழ்ந்துக்கணும். முதல்முதல்ல அப்பாவுக்கு பதிலாக சின்ன வயசுல ஒரு சமயம் கடைக்குப் போய் வேலை பார்த்தேன். அப்போ ஆரம்பிச்சது.

  நான் அந்த காலத்துல எழாங் கிளாஸ் வரை படிச்சிருக்கேன். கணக்கு போடுறது அத்துப்படி. என்னோட கையெழுத்து ரொம்ப அழகா இருக்கும். அதனாலேயே கடைக்கு பில், டே புக் வேலை, இன்கம் டேக்ஸ், சேல்ஸ் டேக்ஸ், பேங்க் போறதுன்னு எல்லா வேலையும் பார்ப்பேன்.

  வாலிப வயசுல சேர்த்து வச்ச காசு வச்சு பலசரக்கு கடை நடத்துனோம். அப்புறம் சேலை வியாபாரம் போச்சு. அனா, எந்த வேலையிலும் நேர்மைதான் எனக்கு முக்கியம். ஒரு கட்டத்துல ஜூஸ் கடை, இளநீர் கடை போட்டோம். அப்படி வேலை பார்த்தே குடும்பத்த வளர்த்தேன்.

  எனக்கு நாலு பசங்க. ஒரு பொண்ணு. மூத்த மகன் கார் டிராவல்ஸ் நடத்துறாரு. அவருக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் எம்.பி.ஏ., முடிச்சிட்டு. எம்.பி.ஏ. முடித்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்திருக்கார். மகள் ஒரு நிறுவனத்துல மேனேஜர்.

  இரண்டாவது மகன் எம்பிஏ படித்து ஆர்ட் கோஆர்டினேட்டரா இருக்கார். அவரது மகன் எம்.ஏ., ஆங்கிலம் முடித்து பி.எட்., பயிற்சியில இருக்காரு. மூன்றாவது மகன் பிலிம் டெக்னாலஜி படித்து சினிமாத் துறையில வேலை.

  நாலாவது பையன் எம்.எஸ்சி., எம்.ஃபில் முடித்து பள்ளி கணித ஆசிரியராக உள்ளார். அவரது மனைவி காவல் ஆய்வாளர். ஐந்தாவதாக பிறந்த மகள் எம்.காம் முடித்து பள்ளியில் அலுவலகப் பொறுப்பாளராக இருக்கிறார். அவரது மகள் எம்.எஸ்சி முதல் நிலை தேர்ச்சி பெற்று இப்போது குரூப் 2 தேர்வுக்கு தயாராகிறார்.

  பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் என்மேல பாசம் வச்சு அன்பா இருக்காங்க. ஆனா நான் அவங்க ஆதரவ எதிர்பார்க்காம சுயமா நிற்கத்தான் விரும்புறேன். கைத்தொழில் நிறைய தெரியும், கணக்கு வழக்கு பார்ப்பேன். ஆள் பழக்கங்கள் இருக்கு. போதுமே இது. பிள்ளைகள வாழவிட்டு தூரமா பார்த்து ரசிக்கணும்.

  நான் கடைசியாக ஆப்பிள் ஷாப்பிங் மாலில் வேலை செய்தேன். மனைவி ரொம்ப காலமா உடம்பு முடியாம கெடந்தாங்க. அஞ்சாறு மாசமா ரொம்ப முடியலன்னு அவங்களுக்காக அலைஞ்சிட்டு இருந்தேன். அப்புறம் அவங்க இறந்திட்டாங்க.கொரோனாவில் கடையெல்லாம் மூடியதால வேறு வழியில்லை. சொந்த தொழில் தொடங்க நினைத்தேன்.

  இளநீர்கடை இந்த சீசனுக்கு சரி. ஏற்கெனவே அனுபவம் இருக்கு. பக்கத்துல மீன் கடைக்கார பையன் பழக்கம். கடை போடணும்ன்னு கேட்டேன். என் கடைக்குப் பக்கத்துல இடம் இருக்குன்னு சொன்னார். இடம் கொடுத்தார். போட்டிருக்கேன்.

  கடைசி சொட்டு இளநீத் தண்ணீ வர குடிக்கிற குளிர்ச்சி மாதிரி, கடைசி சொட்டு உசுரு வர உழைச்சிட்டே வாழுற சந்தோஷம் தனி. கடந்து வந்ததும் கஷ்டம்தான், இப்போ குடும்பத்த நெனச்சு மனசுலயும் கஷ்டம்தான். ஆனா நான் இப்போ சந்தோஷமா இருக்கேன்யா!

  செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
  Published by:Arun
  First published:

  Tags: Madurai

  அடுத்த செய்தி