மாதொருபாகன் ஈசன் பெண்ணுக்கு சரிபாதி அளித்தான்.
மதுரையின் மண்ணரசி மீனாட்சியும் சொக்கரும் சரிபாதி காலங்கள் பட்டம்சூடி ஆட்சி புரிந்தனர்.
மாசியில் திருவிழா நடந்த காலங்களில் பட்டம் சூடிய அரசி ஆறு மாதங்கள் ஆட்சி செய்தாள். ஆவணிமூலத் திருவிழாவில் சொக்கருக்கு பட்டாபிஷேகம். அவர் ஆறு மாதங்கள் ஆளுகிறார்.
திருவிழா சித்திரைக்கு மாறியதும் மீனாட்சி நான்கு மாதங்களும் சொக்கர் எட்டு மாதங்களும் ஆட்சி புரிவதாக ஐதிகம். இப்போதும் சொக்கருக்கு ஆவணியில் பட்டபிஷேகம் நடக்கிறது.
கடந்த அத்தியாயத்தில் மீனாட்சி தத்துவத்தை சொல்லும் போது அவளை அவதாரம் என குறிப்பிட்டு இருந்தோம். அந்த அவதார நோக்கம் நிறைவேறும் காலம்தான் இப்போது நிகழுகிறது.
எல்லாத் தலங்களிலும் திருக்கல்யாணம் நிகழும் என்றாலும் பட்டாபிஷேகம் முடித்து நகருக்கு அரசியாய் மாங்கல்யம் சூடிக் கொள்ளும் அற்புதம் அன்னைக்கு நிகழ்வது மதுரையிலே தான்.
கோயிலின் அனுக்ஞை விநாயகரிடம் வைத்து பூஜிக்கப்பட்ட ராயக் கிரீடம் மீனாட்சிக்கு அணிவிக்கப்படும். அன்னை மகுடம் சாதாரண கிரீடமா என்ன?
அன்னையின் பட்டாபிஷேக ராயக் கிரீடம் 920 ரத்தினக் கற்கள், 78 பச்சை வைரக் கற்கள், 11 மரகதக் கற்கள், 8 கோமேதகக் கற்கள், 7 நீலக் கற்கள் பதிப்பிக்கப் பட்டது.
அதுமட்டுமா, அன்னை கையில் ஒப்படைக்கப்படும் செங்கோல் திருமலை நாயக்க மன்னர் அளித்தது. அது 761 சிவப்பு கற்கள், 261 மரகதக் கற்கள், 74 வைடூரியக் கற்கள், 44 முத்துக்கள், 21 பச்சை வைரக் கற்கள் பதிப்பிக்கப் பட்டது.
அந்த செங்கோலை கோயில் தக்கார் பட்டாபிஷேகத்தன்று சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் வலம் வந்து மீனாட்சியிடம் ஒப்படைப்பார்.
வெற்றியின் குறியீடாக அமைந்த பாண்டியர்களின் வேப்பம் பூமாலை மற்றும் மகிழம்பூ மாலை அணிந்து பட்டம் ஏற்பாள் மீனாட்சியம்மை!
பட்டாச்சாரியார் தன் கையில் ராயக் கிரீடத்தை உயர்த்திக்காட்டி அதற்கு அபிஷேகம் செய்து அன்னையின் சிரசில் அணிவிக்கும் தருணம் அத்தனை பக்தர்களுக்கும் மெய் சிலிர்க்கும்.
நாட்டில் அன்னை ஆட்சி தொடங்குகிறது... உங்கள் வீட்டில் என்ன, சிதம்பர ஆட்சியா? மீனாட்சி ஆட்சியா?
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.