சித்திரைத் திருவிழாவின் தொடக்க அறிகுறி ஒன்றுண்டு. தண்ணீர் பீய்ச்சுக்காரர்கள், திரியாட்டக்காரர்கள் கால் சலங்கை ஒலியோடு 'கோயிந்தோ' முழக்கமிட்டு வீதிவலம் வந்து ஆசிவழங்கி காணிக்கை பெற்றுச் செல்லும் காட்சிகள். கருப்பசாமி ஆட்டம், அழகராட்டம் ஆடும் பக்தர்கள் இவர்கள். அழகர் வரும் பாதையில் அவரோடு பயணிக்கும் அடியவர்கள்.
திருவிழா நடைபெற உள்ள வீதிகளில் இவர்கள் கொஞ்சம் நிறையவே வலம் வருவார்கள். மதியவெயில் தாங்காமல் வீடுகளில் தஞ்சமடையும் மக்கள் இந்த அடியவர்களின் வருகையை வைத்தே திருவிழா நெருங்குவதை அறிவார்கள். பணி நிமித்தமாக மற்ற பகுதிகளுக்கு பயணிக்கும் மக்கள் நகரில் இன்னும் ஒருசில காட்சிகளைக் காண்பார்கள்.
அப்படியே கிடக்கும் வைகை ஆழ்வார்புரம் பகுதி செம்மண் கொட்டி சமப்படுத்தும் பணி தொடங்கும். தேர்முட்டி தேர்கள் இரண்டும் தூசு கழித்து, பெயின்ட் அடித்து, சக்கரம் கிரீஸ் மாற்றி குடைதாங்கும் கட்டைகள் மாட்டுவார்கள். இது திருவிழா நெருங்கியதற்கான அறிகுறி. சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோயில், மீனாட்சி கோயில் பகுதிகள் என நகரெங்கும் பேனர், லோக்கல் சேனல்களின் 'நேரலை விரைவில்...' விளம்பரங்கள் திருவிழா வந்தாச்சு குறியீடு.
சித்திரை பவுர்ணமிக்கு முந்தைய அமாவாசைக்கு அழகர்கோயில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோயில் மற்றும் தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்தம் எனும் பந்தக்கால் விழா நடைபெறும். ஆமாம்... தேனூரில்தான் அழகர் இறங்கவில்லையே அப்புறம் என்ன தேனூர் மண்டபம் எனக் கேள்வி வரும். அதனை இன்னொரு அத்தியாயத்தில் தனியாகச் சொல்கிறேன்.
அதேநாளில் அழகர் பாதை முழுக்க உள்ள மண்டபங்களில் பந்தக்கால் நடப்படும். அன்றைக்கு அழகர் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்குவார்கள். ஏற்கெனவே புதுமண்டப கடைகளில்... தற்போது குன்னத்தூர் சத்திரம் காம்ப்ளக்ஸ் பகுதியில் வாங்கி வைத்திருந்த அழகர் உடைகள் மேனியில் பளிச்சிட ஒய்யாரநடை நடந்து வருவார்கள்.
பஞ்சபூதங்களும் மதுரையில் இப்போது கட்டுப்படப் போகிறது. திருஞானசம்பந்தருக்கும், மங்கலதேவி கண்ணகிக்கும் மதுரையில் கட்டுப்பட்ட தீயைப் போலவே பஞ்சபூதங்களும் இறைவன் சாட்சியாய் மக்களின் வேண்டுகோளுக்கு கட்டுப்படப் போகின்றன. அது எப்படி? அடுத்த அத்தியாயத்தில்...
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.