இதோ, அன்னை மீனாட்சியின் திக்குவிஜயம். திசைகளுக்கு சென்று தரிசனம் தருதலே திக்கு விஜயம்; போரிடுவது அல்ல.
யாவரையும் தன் பக்கம் கவர்ந்து கொள்வதில் வல்லவள் அல்லவோ மீனாட்சி. ஜல்லிக்கட்டில் காளையை அடக்காமல், அணைப்போமே. அதேதான்.
எட்டு திசை பாலகர்களை கவர்ந்து தன் பக்கம் ஈர்க்கிறாள் மீனாட்சி. கிழக்கின் எழுகடல் தெருவில் இந்திரனை வீழ்த்துகிறாள். விளக்குத்தூண் பகுதியில் அக்னி வீழ்கிறான். அடுத்து எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன் அத்தனையும் முடித்து ஈசான்ய மூலையில் ரெங்க லாலா சத்திரத்தில் சொக்கநாதனாம் எம்பெருமானை நேருக்குநேர் சந்திக்கிறாள்.
கோபம் வீழ்ந்து நாணம் எழுந்து பாணம் கைவிட்டு விடுகிறாள். சொக்கனை பார்த்த மீனாட்சியின் மத்திய தனம் மறைகிறது. மீனாட்சியின் அமைச்சர் சுமதி, தங்கள் மணாளன் இவரே என அம்பிகையிடம் எடுத்துரைக்கிறார்.
இந்திர விமானத்தில் சொக்கர் பிரியாவிடை தனியாகவும் மீனாட்சி தனியாகவும் வருவார்கள். இரண்டிலும் சுவாமி அம்மனுக்கு பிரதிநிதிகளாக சிறுவர்கள் அமர்ந்திருப்பார்கள். என்னது, அம்மனுக்கும் சிறுவனா? ஆம், அன்னையின் ஒப்பனையில் அழகாக சிறுவன் அமர்ந்திருப்பான். இந்த காட்சிகள் அந்த வீதியில் நடந்தேறியதும் கோயில் யானை முன்னே வர அதன் பின்னே கல்யாண சீர்வரிசை வருமே, ஏ யப்பப்பா... காணக் கண் கோடி வேண்டும்.
நம் திருமணத்திற்கு மண்டபமே தூங்காமல் இரவெல்லாம் ஆசை ஆசையாக விழித்திருந்து பரபரப்பாக பணிகள் செய்யுமே. அது போல இங்கும். சின்ன திருத்தம். பணி நடப்பது மண்டபத்தில் அல்ல, மதுரையில். அன்றிரவு மதுரையே கல்யாண மண்டபம்தான்.
மறுநாள் காலை, ஆன்மிக குழுவின் சார்பில் பிரம்மாண்டமாக கல்யாண விருந்திற்கான ஏற்பாடும் நடந்து கொண்டிருக்கும். சாப்பிட்டுச் செல்பவர்கள் மொய் எழுதிச் செல்வர். மாப்பிள்ளை வீடு மணப்பெண் வீடு பேதம் தேவையில்லையே. மதுரையே அன்று மணமக்கள் வீடு.
அட, பேசிக்கிட்டே இருந்தா எப்படி, முகூர்த்தத்துக்கு நேரமாகிருச்சுல்ல!
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.