Home /local-news /

மக்கள் உருவாக்க, மன்னர் திருமலை நாயக்கர் சீரமைத்த மகத்தான பெருவிழா 'சித்திரைத் திருவிழா'...!

மக்கள் உருவாக்க, மன்னர் திருமலை நாயக்கர் சீரமைத்த மகத்தான பெருவிழா 'சித்திரைத் திருவிழா'...!

மதுர | மக்கள் உருவாக்கி மன்னர் சீரமைத்த மதுரைத் திருவிழா

மதுர | மக்கள் உருவாக்கி மன்னர் சீரமைத்த மதுரைத் திருவிழா

வைகையின் தெற்கே நகரமைப்பின் மையம் மீனாட்சி கோயில். அழகர்மலை சுற்றுவட்டாரக் கிராமங்களின் நீட்சியாகவும் சாட்சியாகவும் திகழ்வது அழகர்கோயில்.

  துரையின் சித்திரைத் திருவிழா நாள்களை எழுத்தால் படம் பிடித்துக் காட்டும் ஏற்பாடு இது. மதுரை திருவிழா வீதிகளை வரலாறு பேசி பயணிக்கலாம் வாங்க...

  எத்தனையோ சிறப்புகள் சொல்லி மாளாது. ஆனாலும் சொல்லியே ஆகவேண்டிய ஒரு சிறப்பு சித்திரைத் திருவிழாவிற்கு உண்டு. இது, நகரத்துத் திருவிழாவும் கிராமத்துத் திருவிழாவும் ஒன்றிணையும் ஒப்பற்ற கொண்டாட்டம்.

  வைகையின் தெற்கே நகரமைப்பின் மையம் மீனாட்சி கோயில். அழகர்மலை சுற்றுவட்டாரக் கிராமங்களின் நீட்சியாகவும் சாட்சியாகவும் திகழ்வது அழகர்கோயில். இவற்றை ஒருங்கிணைக்கும் திருவிழாவாக பெருமை கொள்கிறது, மதுரையின் மகுட விழாவான சித்திரைப் பெருந்திருவிழா!

  சிவாலயங்களில் திருக்கல்யாணமும் தேரோட்டமும் நடைபெறுவது வழக்கம். சைவ ஆகம விதிக்குட்பட்டு இறைத் திருமணமும், தெய்வப் புறப்பாடும் நடைபெறும். அதேதான் மீனாட்சியம்மன் கோயிலுக்கும். இவை மாசிமாத உற்சவமாகவே நடந்து வந்தன.

  அழகர்மலை கள்ளழகர் கோயில் உற்சவம் சித்திரையில் நடந்தது. அதுவும் சோழவந்தானை அடுத்த தேனூர் வைகையில் நடந்தது. மண்டூக மகரிசிக்கு வைகையில் சாப விமோசனம் எனும் புராண பாவனைச் சடங்குக்காக தேனூர் வைகையில் நடந்த உற்சவம். இரண்டும் வெவ்வேறு திசையில் வெவ்வேறு மாதங்களில் நடந்து வந்தவை.

  அறுவடை காலம் என்பதால் மீனாட்சிக் கோயில் மாசிமாத தேரோட்டத்திற்கு கூட்டமில்லை. வயல் பணிகள் இல்லாததால் சித்திரையில் அழகருக்கு அங்கே கூட்டம். கார்கால வெள்ளமும், கோடையின் வறட்சியும் போல; ஒருபுறம் ஜீவநதி பிரவாகமும், மறுபுறம் காய்ந்த நதிதீரமும் போல.

  கடவுளும் திருவிழாவும் மக்களுக்காகத் தானே, சரி மாற்றியமைக்கலாம் என திட்டம் செய்தார் மன்னர் திருமலை நாயக்கர். மீனாட்சி கோயில் மாசி உற்சவத்தை சித்திரைக்கு மாற்றினர். தேரிழுக்க மக்கள் வருவார்கள் இனி. திருவிழா முறையை வெற்றிகரமாக மாற்ற வித்தாக அமைந்த அழகர் ஊர்வலத்தை நகருக்குள் திருப்பினார்.

  ஒன்றுக்கொன்று தொடர்பான சாட்சிகளோடுதான் பலவற்றையும் செய்திருக்கிறார் திருமலை நாயக்கர். அவர் தெப்பக்குளம் வெட்டியதற்கு அதிலிருந்து கிடைத்த முக்குருணி பிள்ளையார், கோயிலில் சாட்சி. தனது செயல்பாட்டிற்கு இன்னொரு செயல்பாடே அத்தாட்சியாக நீட்டிப்பது திருமலை மன்னரின் சிறப்பு. திருவிழாவுக்கு அங்கும் இங்குமென மக்கள் வடிவம் தர, மன்னர் இணைத்து உயிர் கொடுத்தார்.

  இலக்கியமாக நிற்காமல் எளியோர் மொழியாகவும் தன்னை கட்டமைத்து, பிறமொழி ஆதிக்கத்தையும் நெகிழ்ந்து ஏற்று தனித்து நிற்கும் தமிழ்மொழியின் தன்மையை உதாரணம் கொள்ளலாம். எளிய மக்களுக்காக நெகிழ்ந்து கொடுக்கும் எதுவும் காலம் கடந்தும் நிலைக்கும் என்பதற்கு.

  மக்களுக்காக தன் கட்டமைப்பில் இருந்து விடுபட்டு நெகிழ்ந்து கொண்டு நிற்பதாலேயே சித்திரைத் திருவிழா மக்களால் உயிரோட்டமாக கொண்டாடப்படுகிறது. திசையும் மாதமும் மாறி இணைந்து நிற்கும் இந்த திருவிழாக்கள் மதத்துக்காக மாறவில்லை, மக்களுக்காக மாறியவை. ஒருவகையில், இது பக்தியின் பின்னணியில் நடக்கும் பொதுவுடைமைத் திருவிழா!

  கோயிலில் திருவிழா தொடங்கும் முன்பே மக்கள் கொண்டாடத் தொடங்கிவிடுவர். இனி நகரெங்கும், கிராமமெங்கும் ஜல், ஜல் என சலங்கைச் சத்தம் கேட்டுகொண்டே இருக்கும். சலங்கையா, என்ன சங்கதி? அட, பந்தக்கால் நாட்டி விரதம் தொடங்கியாகிவிட்டதே... என்ன பந்தல், விரதம்? அடுத்த அத்தியாயத்தில் 'கோயிந்தோ' போடுவோம்!

  செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
  Published by:Esakki Raja
  First published:

  Tags: Madurai, Madurai Chithirai Festival

  அடுத்த செய்தி