மதுரை சுப்ரமணியபுரம் ரயில்வே மேம்பாலம் மற்றும் பைபாஸ் சாலை வசந்தநகர் ரயில்வே மேம்பாலம் இரண்டுமே நகரில் ஆபத்தான நிலையில் உள்ள பழைய மேம்பாலங்கள்.
பெரியார் நிலையம் பகுதியையும் மதுரைக் கல்லூரி பகுதியையும் சுப்ரமணியபுரம் மேம்பாலம் இணைக்கிறது. குறுக்கே செல்கிற இராமேஸ்வரம் ரயில்வே லயனுக்காக அமைக்கப்பட்ட இந்த மேம்பாலம் நகரில் கிரைம் பிராஞ்ச் சந்திப்பில் தொடங்குகிறது.
தினசரி பேருந்துகள், லாரிகள், கார், டூவீலர் என பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கிற இந்தப் பாலம் நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது. வலுவிழந்த இந்த பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதைத் தவிர்க்க எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
பாலம் ஓரளவுக்கு அகலமாக இருந்தாலும் வலுவில்லாமல் உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் வாகன ஓட்டிகளுக்கும் பயணிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் பாலமாகவே இந்த ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது.
அடுத்தது, வசந்தநகர் மேம்பாலம். குறுக்கே மதுரை - போடி ரயில்வே லயன் செல்கிறது. இந்த பாதை தற்போதுதான் அகல ரயில் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து ரயில் போக்குவரத்து அதிகளவில் நடைபெறும் வாய்ப்புள்ளதால் இந்தப் பாலம் விரைவில் சீர்செய்யப்பட வேண்டும்.
பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் தொடங்கி மத்திய போக்குவரத்துக் கழக பணிமனை பகுதியில் பாலம் முடிகிறது. இரண்டு பகுதிகளுமே நான்கு வழிச் சாலைகளாக விரிவாக அமைந்துள்ள நிலையில், நடுவே இந்தப் பாலம் மட்டும் மிகவும் குறுகலாக விபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது.
பாலத்தின் ஓரங்கள் முழுக்கவே புதர்மண்டி, கொஞ்சம் கொஞ்சமாக பாலத்தின் வலுத் தன்மையை இழக்கச் செய்து கொண்டிருக்கிறது. பாலத்தின் இரண்டு மூலைகளிலும் தகுந்த பாதுகாப்பு வேலிகள் இல்லாததால் வாகனங்கள் ஆபத்தான முறையிலேயே பயணிக்கின்றன.
ஏதேனும் கனரக வாகனம் பாலத்தின் பாதிவழியில் கோளாறு ஏற்பட்டு நின்றுவிட்டால் அந்தச் சாலைப் பகுதியே போக்குவரத்து நெருக்கடியால் ஸ்தம்பித்துவிடும். மேலும் சுப்ரமணியபுரம் பாலம் பகுதியைப் பயன்படுத்த முடியாத கனரக வாகனங்கள் இந்தப் பாலத்தின் வழியேதான் தெற்கு நோக்கிச் செல்கின்றன.
எனவே தென் மாவட்டங்களையும், மதுரை நகர்ப் பகுதியையும் இணைக்கும் இந்த முக்கியமான இரண்டு பாலங்களையும் விரைவில் சீர்செய்து விடுவது எதிர்கால மதுரையின் போக்குவரத்து நலனுக்கு ஏற்றது என்பது பொதுமக்களின் வேண்டுகோள்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.