Home /local-news /

மதுரை : குட்டீஸ்களுக்கு  இலவச சிலம்ப வகுப்பு - வீச்சோடு கொண்டாடிய வீரப்பொங்கல்! 

மதுரை : குட்டீஸ்களுக்கு  இலவச சிலம்ப வகுப்பு - வீச்சோடு கொண்டாடிய வீரப்பொங்கல்! 

Madurai

Madurai News : மதுரை பெத்தானியாபுரம் சிலம்பம் விளையாட்டு வீரர்கள் ஒன்றுகூடி இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு தொடங்கினர்.

Madurai News : மதுரை பெத்தானியாபுரம் சிலம்பம் விளையாட்டு வீரர்கள் ஒன்றுகூடி இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு தொடங்கினர்.

  • Last Updated :
    வீரம் விளைந்த மண்ணென்று மதுரையை புகழ்வது மரபு. இங்கு பெண்ணும், மண்ணும் வீரத்துக்கே எனக் கொண்டாடப்படுகிறது. அப்படிப்பட்ட மதுரையில் இளைஞர்கள் இணைந்து தங்களின் குடியிருப்பு ஏரியாக்களில் அடுத்த தலைமுறைக்கு சிலம்பம் இலவசமாகக் கற்றுத் தருகின்றனர். அவர்கள் ஓரிடத்தில் கூடி கொண்டாடிய பொங்கல் அக்கம் பக்கத்தினரையும் சேர்த்து மகிழ்ச்சிப்படுத்தியது.

    மதுரை பெத்தானியாபுரம் சிலம்பம் விளையாட்டு வீரர்கள் ஒன்றுகூடி இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு தொடங்கினர். அடுத்தடுத்த வருடங்களில் பைக்காரா, எஸ்.எஸ் காலனி என பல குடியிருப்பு பகுதிகளிலும் இந்த வகுப்பு கிளை பரப்பத் தொடங்கியது. பெண்கள் குழந்தைகள் தற்காப்புக் கலை கற்றுக்கொள்ள வேண்டும் எனும் நோக்கோடு தொடங்கப்பட்ட இந்த வகுப்புகள் வெற்றிகரமாக நடைபோடுகின்றன.

    பயிற்சி பெரும் குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தும் விதத்திலும், குழுவினர் அனைவரும் தங்களுக்குத் தாங்களே உற்சாகத்தை ஏற்படுத்திக் கொள்ள ஏதுவாகவும் பொங்கல் விழா கொண்டாட்ட ஏற்பாடுகளைச் செய்தனர். முதன்முதலில் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்ட பெத்தானியாபுரத்தில் பயிற்சிக்கான காலி இடத்தில் பொங்கல் கொண்டாட்டம் களை கட்டியது. குழந்தைகள் பெற்றோர்கள் பயிற்சியாளர்கள் கூடினர்.

    தோரணங்கள், கோலங்கள், கரும்பு, பொங்கல் பானை, ஸ்பீக்கர் செட் என திடல் விழாக் கோலம் பூண்டிருந்தது. சிலம்ப வீராங்கனைகள் பொங்கல் வைத்து பொங்கியதும், 'பொங்கலோ பொங்கல்' என ஆரவாரமிட, மாணவர்களுக்கான சிலம்பாட்டம், பரிசு, போட்டி, ஆட்டம், பாட்டம் என்று திடல் திக்குமுக்காடியது. அக்கம்பக்கத்து மக்களும் குழந்தைகளின் குதூகலத்தைப் பார்த்து வந்து இணைந்து கொள்ள, அட்டகாசமாய் நிகழ்ச்சிகள் நடந்தன.

    சிலம்ப மாஸ்டர்கள் பேசும்போது, குழந்தைகளுக்கு கல்விக்கு இணையானது விளையாட்டும், தற்காப்புக் கலையும் என்றனர். ஆம், மண்ணோடு கலந்த ஒன்றுதான் மக்களை எதிலும் கொண்டு செலுத்தும். மண்ணுக்குரிய மருத்துவம், உணவு வரிசையில் சிலம்பாட்டம் என்னும் மண்ணுக்கேற்ற தற்காப்புக் கலைதான் நம் வீரத்தின் முழுமை!

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Vijay R
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி