மதுரை கள்ளழகருக்கு நடைபெறும் முக்கிய உற்சவங்களில் ஒன்று மாசி மாத தெப்ப உற்சவம். ஆண்டுக்கு மூன்று உற்சவங்களில் மட்டுமே அழகர், கோட்டை வாசலை விட்டு வெளியே வருவது வழக்கம் அதில் ஒன்று இந்த தெப்ப உற்சவம்.
கோட்டை வாசலை விட்டு புறப்பட்டு ஒரு நாள் முழுக்க பொய்கைக்கரைப்பட்டி தெப்பக்குளத்தில் அருள்பாலித்து விட்டு, மீண்டும் மாலையில் கோயிலுக்கு திரும்புவது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்ற விழா.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இந்த பிரம்மாண்ட தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்ப வழியில்லாமல் தூர்வார ஏற்பாடுகள் இல்லாமல் அப்படியே கிடந்தது. இதனால், அத்தனை ஆண்டுகளும் அழகர் கரையில் மட்டுமே சுற்றிவந்து மாலையில் அழகர்மலை திரும்பினார்.
இந்நிலையில், இந்த ஆண்டு திருவிழாவிற்கு தெப்பக்குளத்தை சீர்செய்ய வேண்டும் என்ற வேகத்தில் கிராமத்து பொதுமக்கள், அழகர்கோயில் நிர்வாகம், பொதுப்பணித் துறையினர் ஒன்றுகூடி செயல்பாட்டை துவக்கினர்.
கள்ளந்திரி கால்வாய், நூபுரகங்கை தண்ணீர், சுற்றுவட்டாரப் பகுதி மழை நீர் ஆகியவை இந்த குளத்தில் வந்து சேரும்படி குளத்திற்கான புராதன கால்வாய்களை சீர்செய்தனர். அதன் பயனாய் இன்று தெப்பக்குளம் நீர் ததும்பி காட்சியளிக்கிறது.
மொத்தத்தில் இந்த ஆண்டு வெற்றிகரமாக அழகர் தெப்பத்தில் எழுந்தருள, அதற்கான ஏற்பாட்டை அழகர் கோயில் நிர்வாகம் செய்ய தொடங்கியது.
தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தை அலங்கரிப்பது மற்றும் தெப்பத்தை அன்னப்பறவை போல அலங்கரிப்பதில் ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பொய்கைக்கரைப்பட்டி கிராமம், சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் அழகர்கோயில் பக்தர்களின் பெரும் கனவும் எதிர்பார்ப்புமாய் இருந்த இந்த பொய்கைக்கரைப்பட்டி தெப்பத்தில் அழகர் எழுந்தருளும் நிகழ்வு நாளை வெகு சிறப்பாக நடைபெற உள்ளதால் திருவிழாவில் வழக்கத்தைவிடவும் பல்லாயிரம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன்- மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.