Home /local-news /

டி.வி.எஸ்.நகர் : ராணுவத்தில் உயிர்நீத்த இளம் தியாகி வீட்டில் வீரர்கள் மரியாதை - குடியரசு தினத்தில் ஏற்பாடு!

டி.வி.எஸ்.நகர் : ராணுவத்தில் உயிர்நீத்த இளம் தியாகி வீட்டில் வீரர்கள் மரியாதை - குடியரசு தினத்தில் ஏற்பாடு!

டி.வி.எஸ்.,நகர்

டி.வி.எஸ்.,நகர் : ராணுவத்தில் உயிர்நீத்த இளம் தியாகி வீட்டில் வீரர்கள் மரியாதை -

Madurai News | போர், பனி சூழலில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்த இந்திய இராணுவ அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது

    போர், பனி சூழலில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்த இந்திய இராணுவ அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மரியாதை செலுத்தும் கடமையை நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தேசிய மாணவர் படை செய்யும். இது நாட்டின் 73வது குடியரசு தினமான ஜன.,26 அன்று தொடங்கப் பட்டுள்ளது.

    நாட்டின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தக் குடியரசு தினத்தன்று நடைபெற்றது. வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்களது நெருங்கிய உறவினர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று பட்டையம் அளித்து கௌரவப் படுத்துவர்.

    அதன்படி செளரி சக்ரா விருது பெற்ற பிளைட் லெப்டினென்ட் கே பிரவீன் அவர்களுக்கு மலர்வளையம் வைத்து, மலர் மாலை சாற்றி மற்றும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அன்னாருக்கு இந்திய இராணுவ அமைச்சகம் சார்பில் மத்திய போர் நினைவிட உருவம் பொறித்த நினைவுச் சின்னம் கெளரவ பரிசாக வழங்கப்பட்டது.

    வீரர் பிரவீனுக்கு இராணுவ மரியாதை தரும் நிமித்தமாக மதுரை என்சிசி குரூப் சார்பில் 7வது என்சிசி பட்டாலியனைச் சார்ந்த இராணுவ அதிகாரி சுபேதார் மேஜர் நன்னையா தலைமையில் அதிகாரிகள், வீரர்கள் மற்றும் தியாகராசர் கல்லூரி சார்பில் என்சிசி அதிகாரி மேஜர் அருண் நாகேந்திரன் தலைமையில் என்சிசி தரைப்படை மாணவ மாணவியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வீரர் பிரவீன் படித்த தியாகராசர் கல்லூரியின் சார்பில் அவரது உருவப்படம் மற்றும் அவரது நினைவாக நடைபெற்ற விழாவின் புகைப்படங்கள் இடம் பெற்ற படம் வழங்கப்பட்டது.

    பிரவீன் சார்பில் அவரது அன்னை திருமதி மஞ்சுளா, அந்த மரியாதைகளை கண்ணீர் ததும்ப ததும்ப ஏற்றுக் கொண்டார். வீரர் பிரவீனின்பாட்டி, சித்தி, சகோதரர்கள் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பகுதிவாழ் பொது மக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Murugesh M
    First published:

    Tags: Army, Independence day, India, Madurai, Republic day

    அடுத்த செய்தி