'தோற்றது போதும். எம்.ஜி.ஆர், அம்மா கட்டிகாத்த
அதிமுகவிற்கு தலைமை ஏற்க வாருங்கள்' என
சசிகலாவிற்கு அழைப்பு விடுத்து அவரது ஆதரவாளர்கள்
மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக ஒரு மாநகராட்சியைக் கூட கைப்பற்றவில்லை.
மேலும் கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சில பகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்துள்ளனர். இந்த தேர்தல் முடிவு அதிமுகவினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என கூறி, அதிமுகவின் சசிகலா ஆதரவு தரப்பினரால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதிமுகவைச் சேர்ந்த முனிஸ் என்பவர் மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.
அதில், 'தோற்றது போதும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் கட்டிகாக்கப்பட்ட அதிமுகவை தோல்வியிலிருந்து மீட்க தலைமையேற்க வாருங்கள் தாயே' என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் மாநகர பகுதிகளில் ஆங்காங்கே ஒட்டப்பட்டு உள்ளன. இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்க செல்லும் முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ, நிர்வாகிகள் என அனைவரும் காணும் வகையில் கே.கே.நகர், அவுட்போஸ்ட், கோரிப்பாளையம் பகுதிகளிலும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது அதிமுக தரப்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன் - மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.