மதுரை - போடி அகல ரயில் பாதையில் நடந்த சோதனை ஓட்டத்தின் போது பழங்காநத்தம் அருகே மாடு தண்டவாளத்தில் நின்றதால் ரயிலை லாவகமாக இயக்கி நிறுத்தினார் இன்ஜின் டிரைவர்.
மதுரையில் இருந்து போடி வரையிலான அகல ரயில் பாதை பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டன. இந்நிலையில் தொடர்ந்து சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று (மே 2) காலை 9 மணியளவில் பழங்காநத்தம் - மாடக்குளம் இணைப்பு கேட் அருகே சோதனை ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது.
ஆனால் கேட்டின் அருகே தண்டவாளத்தில் மாடு ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டே இருந்தது. ரயில் ஓட்டுநர் தொடர்ந்து ஹார்ன் ஒலி எழுப்பியும் பயனில்லை. உடனடியாக சுதாரித்த ஓட்டுநர் மளமளவென ரயிலின் வேகத்தை குறைத்தார். மாட்டின் அருகில் வந்ததும் ரயிலை நிறுத்தினார்.
ரயிலில் இருந்து இறங்கிய இன்ஜின் டிரைவர் மாட்டை விரட்டி விட்டு மீண்டும் ரயிலை இயக்கத் தொடங்கினார். மாடு ரயிலில் சிக்காமல் தப்பிய நொடிகளை அங்கிருந்த வாகன ஓட்டி ஒருவர் வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார்.
மேலும், அப்பகுதி மக்கள் இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளனர். இந்த ரயில் சோதனை ஓட்டத்துக்கான ரயில் என்பதால் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் உடனடியாக நிறுத்த முடிந்தது. இனி வரும் காலங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அதிகம் இயங்கத் தொடங்கும்.
எனவே இந்த ரயில் பாதைகளில் கேட்டுகள் இல்லாத பகுதிகளில் கால்நடைகளும், மனிதர்களும் கடந்து செல்வதை தடுக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மேலும் கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுவோர் ரயில் பாதை அருகே வராதபடி எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதும் அந்த பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.