பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வு உள்ளிட்ட பொது பிரச்சினைகளையும், அரசு ஊழியர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளையும் எதிர்த்து, மத்திய அரசை கண்டித்து இன்றும் நாளையும் அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.
பொது போக்குவரத்து, வணிக நிறுவனங்கள் இயங்காது உள்ளிட்ட அறிவிப்புகள் அந்தந்த தொழிற்சங்கங்கள் சார்பில் வெளியிடப்பட்டன. அந்த வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த வேலை நிறுத்தம் நடந்து வருகிறது. தமிழகத்திலும் வேலைநிறுத்தம் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரையில் பேருந்து நிலையங்களில் பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. மாட்டுத்தாவணி, பெரியார் நிலையம் ஆகியவை வெறிச்சோடி காணப்படுகின்றன. அதிகாலையில் இருந்து மணிக்கணக்காக பேருந்துக்கு மக்கள் காத்துக் கிடக்கும் அவலம். பேருந்து இருக்கும் என புறப்பட்டு வந்துவிட்ட பள்ளி மாணவர்களும் பேருந்துகள் இல்லாததால் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்புவதை காண முடிந்தது.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நகர் பேருந்துகள் நிற்கும் இடத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் மைக்கில் அறிவிப்புகள் தொடர்ந்து செய்யப்பட்டு வந்ததால் பொதுமக்கள் ஓரளவுக்கு பேருந்துகளின் வருகையை குறித்து தெளிவோடு மாற்று முடிவு எடுத்து புறப்பட்டுச் சென்றனர், பலர் காத்துக் கொண்டும் இருந்தனர்.
ஆனால் நகரின் மத்திய பகுதியில் இருக்கும் பெரியார் பேருந்து நிலையத்தில் நகர பேருந்துகள் வருகை, புறப்பாடு குறித்த எந்தவித அறிவிப்பும் மைக்கில் செய்யப்படாததால் பாமர மக்கள் எங்கே விபரம் தெரிந்து கொள்வது என தெரியாமல் மணிக்கணக்காக கால் கடுக்க கொளுத்தும் வெயிலில் காத்துக் கிடக்கும் அவலம் நீடிக்கிறது.
இது குறித்து பெரியார் பேருந்து நிலைய அதிகாரியிடம் கேட்ட பொழுது அவர் சரியான பதிலை தெரிவிக்கவில்லை..
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.