மதுரை அவனியாபுரத்தில் 108 ஆம்புலன்ஸ் விபத்துக்கு உள்ளானதில் ஆம்புலன்ஸில் இருந்த நர்ஸ் காயமடைந்தார். சீட் பெல்ட் அணிந்திருந்ததால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உயிர் தப்பியதோடு பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டுள்ளது.
மதுரை அவனியாபுரத்தில் இருந்து தெற்குவாசல் நோக்கி 108 ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது. அதில் ஓட்டுநரும், நர்ஸும் இருந்தனர். வழியில் திடீரென ஆம்புலன்ஸில் ஓட்டுநர் பகுதி கதவு திறந்து கொண்டது.
ஓட்டுநர் வண்டியை நிறுத்தாமலே கதவடைக்க முயன்றதில் ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டிழந்தது. இரு சக்கர வாகனம் மற்றும் சைக்கிள் மீது ஆம்புலன்ஸ் இடித்துச் சென்று பின்னர் மரத்தில் மோதி நின்றது. ஆம்புலன்ஸில் இருந்த பெண் செவிலியர் காயமடைந்தார்.
மற்றொரு 108 மூலமாக காயமடைந்த நர்ஸை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த 108 ஆம்புலன்ஸ் மேலாளர் மற்றும் வாகனப் பராமரிப்பு மேலாளர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.
மேலும், சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முக்கியமாக, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சீட்பெல்ட் அணிந்திருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்பது தெரியவந்திருக்கிறது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன் - மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.