தேசிய கயிறு வாரியம் சார்பில் 'ரன் ஃபார் காயர்' மாரத்தான் போட்டியை
கோவையில் இன்று, மத்திய அமைச்சர்களான நாராயண் ரானே மற்றும் பானுபிரதாப் சிங் வர்மா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கயிறு வாரியம், மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அமைப்புடன் இணைந்து தேசிய கயிறு வாரிய மாநாட்டினை நேற்று கோவையில் நடத்தியது.
நாட்டின் 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஆசாதி க அம்ரித் மகோத்சவ் என்ற கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மாநாடு நடைபெற்றது.
இதில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே தலைமை விருந்தினராக பங்கேற்றார். இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா மற்றும் கயிறு வாரிய தலைவர் குப்புராமு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக மாரத்தான் போட்டி இன்று காலை 'ரன் ஃபார் காயர்' என்ற பெயரில் கோவை வ.உ.சி பூங்கா பகுதியில் நடைபெற்றது.
கயிறு வாரியத்துடன் கோவை மாவட்ட அத்லட்டிக் அமைப்பு இணைந்து இந்த மாரத்தான் போட்டியை நடத்தியது.இந்த மாரத்தான் போட்டியில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தென்னை நார் மற்றும் அதில் இருந்து கிடைக்கப்பெறும் மதிப்புக்கூட்டு பொருட்கள் குறித்து தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப்போட்டியில் 8ம் வகுப்புக்கு உட்பட்ட மகளிர் பிரிவு 3 கிலோமீட்டர் மராத்தானில் ஹர்ஷினி என்ற மாணவி முதல் இடத்தை பிடித்து ரூ.5 ஆயிரம் பரிசை பெற்றார்.
சுஹாசினி இரண்டாமிடம் பெற்று ரூ.3 ஆயிரமும், ஹாசினி கோவிந்தராஜ் மூன்றாமிடம் பெற்று ரூ.2 ஆயிரம் பரிசையும் பெற்றனர்.
9 முதல் 12ம் வகுப்பு மாணவியருக்கான 3 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் நிரஞ்சனா என்ற மாணவி முதலிடத்தை பிடித்து ரூ.5 ஆயிரம் பரிசு தொகையை பெற்றார். இரண்டாமிடத்தை சிவானி என்ற மாணவியும், மூன்றாமிடத்தை பிரியதர்ஷினி என்ற மாணவியும் பிடித்தனர். 8ம் வகுப்புக்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் முதலிடத்தை சுஜன் என்பவரும், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை கருப்புசாமி மற்றும் தர்னீஷ் என்ற மாணவர்கள் பிடித்து பரிசுத்தொகையை வென்றனர்.
9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான 5 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் ஆகாஷ் என்ற மாணவர் முதலிடத்தை பிடித்து ரூ.5 ஆயிரம் பரிசை வென்றார். இரண்டாமிடத்தை கார்த்திக் என்ற மாணவரும் மூன்றாமிடத்தை சுனில் குமார் என்ற மாணவரும் பிடித்தனர்.
பெண்களுக்கான 5 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் ஊர்மிளா சுஷில் முதலிடத்தை பிடித்து ரூ. 5 ஆயிரம் பரிசை வென்றார். இரண்டாமிடத்தை மஞ்சு மற்றும் மூன்றாம் இடத்தை கலை மணி ஆகியோர் வென்றனர்.
ஆண்களுக்கான 10 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் முதல் இடத்தை ஷிஜூ என்பவர் பிடித்து ரூ.5 ஆயிரம் பரிசை பெற்றார். ரஞ்சித் இரண்டாம் இடத்தையும், ஜெபக்குமார் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
இதுபோக, அனைத்து பிரிவுகளிலும் முதல் 8 இடங்களை பிடித்தவர்களுக்கு ரூ.1000 பரிசு தொகையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
உங்கள் நகரத்திலிருந்து(கோயம்புத்தூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.