விடுதலை புலிகள் பயன்படுத்திய நீர் மூழ்கி கப்பல், வீரப்பனிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் போலீசார் பயன்படுத்திய பொருட்களை உள்ளடக்கி வரலாற்றை பறைசாற்றி நிற்கிறது கோவையில் அமைந்துள்ள ஹேமில்டன் 'போலீஸ் மியூசியம்'
கோவையில் கடந்த 1918 காலகட்டத்தில் ஆங்கிலேய போலீஸ் அதிகாரியாக இருந்தவர் ஹேமில்டன். இவர் கோவை ரயில் நிலையம் எதிரே போலீஸ் அதிகாரிகளுக்கான கிளப் ஒன்றை அமைத்தார். அதன் பெயர் தான் ஹேமில்டன் கிளப் என்று தற்போது அழைக்கப்பட்டு வருகிறது.
சுமார் 3,400 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட இந்த போலீஸ் கிளப்-ல் 16 அறைகள், நூலகம், சமையல் அறை உள்பட பல்வேறு வசதிகள் இருந்தன. ஆங்கிலேய ஆட்சி மாற்றத்திற்குப் பின் அந்த கட்டிடம் முறையான பராமரிப்பின்றி விடப்பட்டது.
நீண்ட நாட்களாக பராமரிப்பில்லாமல் இருந்த காரணத்தால் அந்த கிளப் பாழடைந்து காணப்பட்டது. இந்த நிலையில் கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய அமல்ராஜ் கடந்த 2016-ம் ஆண்டு ஹேமில்டன் கிளப் கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க திட்டமிட்டார். மேலும், அந்த கட்டிடத்தில் காவலர் அருங்காட்சியகம் அமைக்கவும் முடிவு செய்தார்.
தொடர்ந்து ரூ.60 லட்சம் செலவில் ஆங்கிலேயர் கால கட்டிடம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. மொத்தம் ஒரு ஏக்கர் பரப்பவில் அமைந்துள்ள ஹேமில்டன் கிளப்பில் தமிழக காவல்துறையின் வரலாறு, சிறப்பம்சங்கள் மற்றும் சாதனைகளை எடுத்துரைக்குமாறு வரலாற்று சிறப்பு மிக்க பொருட்கள், குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட பயன்படுத்திய ஆயுதங்கள், போலீசார் உபயோகப்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், பழங்கால போர் ஆயுதங்கள், வீரப்பன், மலையூர் மம்பட்டியான், விடுதலை புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள். போலீசாருக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் வழங்கப்பட்ட சீருடைகள், போலீசார் பயன்படுத்திய காமிராக்கள், தொலை தொடர்பு சாதனங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இவை மட்டுமல்லாது மாமல்லபுரத்தில் தமிழக காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட விடுதலை புலிகள் பயன்படுத்திய, கோகுலன் 2- 93 என்ற நீர் மூழ்கி கப்பலும், போலீசார் பயன்படுத்திய ரோந்து படகும், டார்பிடோ என்ற சக்திவாய்ந்த நீர் மூழ்கி ஏவுகணையும் வைக்கப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தின் நுழைவு வாயிலிலேயே இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட T-55 ரக பீரங்கி நிறுத்தப்பட்டு பழமையையும் வரலாற்றையும் காண அழைக்கிறது.
தமிழக போலீசாரின் வீரதீர செயல்களையும், பழங்காலத்தில் பயன்படுத்திய ஆயுதங்களையும் வரலாறுகளாக தாங்கி நிற்கும் இந்த ஹேமில்டன் காவலர் அருங்காட்சியகம் கடந்த 2016ம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என்று கூறி வரவேற்கும் இந்த அருங்காட்சியகத்திற்கு இதுவரை 2 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்துள்ளனர்.
காலை 10 மணிக்கு திறக்கப்படும் இந்த அருங்காட்சியகம் மாலை 4 மணியளவில் செயல்படும். வரலாறு தெரிந்துகொள்ள கோவையில் ஒரு சுற்றுலா செல்ல விரும்பும் பொதுமக்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்றுவரலாம்.
செய்தியாளர் : சௌந்தர்மோகன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore