கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தொடங்கப்பட்ட மேம்பாலப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், மாற்றுப்பாதைகள் குண்டும் குழியுமாக இருப்பதாலும், போக்குவரத்து நெருக்கடியாலும் அவ்வழியாக பயணிக்கும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து சாமிசெட்டிபாளையம் வரை 1.4 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ரூ.85 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவங்கியது முதல் எல்.எம்.டபிள்யூ பிரிவில் இருந்து சாமி செட்டிபாளையம் வரை துரித கதியில் தூண்கள் அமைக்கப்பட்டன.
ஆனால் தூண்களுக்கு இடையிலான கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் பல மாதங்களாக மந்த கதியில் நடைபெற்று வருகின்றன. இதனால் பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மக்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்படுகின்றனர்.
இதில், கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி செல்லு மக்கள் பாலமலை சாலை வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகின்றனர். இதனால் குறுகலான சாலையில் 6 கிலோ மீட்டர் தூரம் அதிகமாக பயணித்து மீண்டும் மேட்டுப்பாளையம் சாலையை அடைகின்றனர் வாகன ஓட்டிகள். இந்த சாலை குறுகலாக இருப்பதால் இங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வரும் வாகன ஓட்டிகள் வன்னாங்கோவில் வழியே பெரியநாயக்கன்பாளையம் சந்தை ஈரோடு வழியாக திருப்பி விடப்படுகின்றனர்.
இந்த இரண்டு மாற்றுப்பாதைகளும் முறையாக பராமரிக்கப்படாததால் குண்டும் குழியுமாக மாறி உள்ளது. எனவே இந்த சாலைகளில் பயணிக்கும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஜாகர் என்பவர் கூறுகையில், "மேம்பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆறு மாத காலமாக 10 சதவீத பணிகள் கூட நடைபெறவில்லை. குறிப்பாக கடந்த 2 மாதங்களில் பாலம் வேலை முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாற்றுப் பாதைகள் கடும் சேதமடைந்துள்ளாதால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இடுப்பு வலி ஏற்பட்டு வருகிறது. சாலைகள் அந்த அளவிற்கு மோசமாக உள்ளன. மேட்டுப்பாளையம், ஊட்டி, மைசூர் செல்லும் முக்கிய சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணியை தாமதப்படுத்துவதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கிறோம்." என்றார்.
இதனிடையே மாற்றுப்பதை குறித்த முறையான அறிவிப்பு பலகைகளை நெடுஞ்சாலைத்துறையினர் பல இடங்களில் வைக்கவில்லை. இதனால், ஊட்டி செல்லும் சுற்றுலாப்பயணிகள் மாற்றுப்பாதை வழியாக செல்லும் போது வேறு வழியாக சென்று சிக்கிக் கொள்கின்றனர்.
புழுதிக்காற்று, சேதமடைந்த சாலைகள், கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகளுக்கு தீர்வை கொடுக்கும் வகையில் மேம்பால பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், பணிகள் நிறைவடையும் வரை மாற்றுப்பாதைகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் : சௌந்தர்மோகன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore