Home /local-news /

கோவையிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பிய சுட்டீஸ்!

கோவையிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பிய சுட்டீஸ்!

இலங்கைக்கு பணம் அனுப்பிய குழந்தைகள்

இலங்கைக்கு பணம் அனுப்பிய குழந்தைகள்

உண்டியலில் சேமித்த பணத்தை இலங்கை நிவாரண நிதிக்கு அனுப்பிய குழந்தைகள் பாராட்டுக்களை பெற்றுள்ளனர்.

    உண்டியலில் சிறு சிறுக சேமித்த பணத்தை இலங்கை நிவாரண நிதிக்கு அனுப்பிய குழந்தைகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

    ரம்ஜான் பண்டிகையின் போது சிறப்புத் தொழுகை நடத்தும் இஸ்லாமிய மக்கள் தொழுகை முடிந்ததும் ஏழை எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்வது வழக்கம்.

    அந்த வகையில் இந்த ரம்ஜான் பண்டிகை முடிந்த கையோடு தாங்கள் சேர்த்து வைத்த பணத்தை இலங்கை நிவாரணத்திற்கு வழங்கியுள்ளனர் கோவையை சேர்ந்த மழலைகள்.

    கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹசான் பாஷா. இவரது மகள் ஹனா பாத்திமா (9) அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். மகன் ஹர்பான் பாஷா ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த இரண்டு குழந்தைகளும் தங்களுக்கு கிடக்கும் பணத்தை உண்டியலில் சேர்த்து வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகை தினத்தில் தாங்கள் சேமித்த பணத்தை ஏழை மக்களுக்குக் கொடுத்து உதவி வருகின்றனர்.

    இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த சூழலில் தமிழக அரசு அந்நாட்டு மக்களின் உணவு மற்றும் மருத்துவத்திற்கு உதவ முன்வந்துள்ளது. இதனை அறிந்த மக்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

    கடந்த 3ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்பட்ட நிலையில், ஹனா பாத்திமா மற்றும் அவரது தம்பி ஹர்பான் பாஷா ஆகிய இருவரும் சேமித்து வைத்த பணத்தை ஏழைகளுக்கு கொடுக்க முடிவு செய்தனர்.

    அதே நேரத்தில் இலங்கை அரசுக்கு தமிழக அரசு உதவுவதை கேட்டறிந்து, இலங்கை குறித்த முழு விவரத்தையும் தந்தையிடம் கேட்டறிந்துள்ளனர். தொடர்ந்து இந்தாண்டு உதவி செய்வதற்காக உண்டியலில் இருந்து எடுத்த பணத்தை இலங்கை நிவாரண நிதிக்கு அனுப்ப முன்வந்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து உண்டியலில் இருந்து எடுத்த ரூ.5 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அங்கு வைத்து ஆட்சியர் சமீரனிடம் நிவாரண தொகையை வழங்கினர். குழந்தைகள் ஆட்சியரிடம் என்ன கொடுக்கிறார்கள் என்று விசாரித்த அங்கிருந்த பொதுமக்கள் உண்மை அறிந்து நெகிழ்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து குழந்தைகளின் தந்தை ஹசான் பாஷா கூறுகையில், "எனது இரண்டு குழந்தைகளும் தங்களுக்கு கிடைக்கும் பணத்தை செலவு செய்யாமல், அதை ஒரு உண்டியலில் சேர்த்து வைத்து அதை ரம்ஜான் தினத்தன்று என்னிடமோ அல்லது எனது மனைவியிடமோ கொடுத்து ஏழை மக்களுக்கு உதவி செய்யக் கூறுவார்கள்.தற்போது இலங்கைக்கு உதவியுள்ளனர்.

    இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் இருவரையும் பாராட்டினார். பெற்றோரான எங்களுக்கு இது பெரு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது" என்றார்.

    சிறு வயதிலேயே உதவும் மனப்பான்மை கொண்ட இந்த மழலைகள் பாராட்டிற்கு உரியவர்கள் என்பதி எந்த சந்தேகமும் இல்லை.

    செய்தியாளர்: சௌந்தர்மோகன்
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore

    அடுத்த செய்தி