• HOME
 • »
 • NEWS
 • »
 • local-18
 • »
 • திருச்சுழி: ஆதரவற்றோர் இல்லம் கட்டும் நாடக நகைச்சுவை நடிகர்

திருச்சுழி: ஆதரவற்றோர் இல்லம் கட்டும் நாடக நகைச்சுவை நடிகர்

எம்.கே.ஆர் அன்பாலயம்

எம்.கே.ஆர் அன்பாலயம்

விருதுநகரில் ஆதரவற்றோர் இல்லம் கட்டும் பணியில் நாடக நகைச்சுவை நடிகர் எம்.கே.ஆர் என்ற ராதா கிருஷ்ணன் ஈடுபட்டு வருகிறார்.

 • Share this:
  முதியோர்கள், ஆதரவற்றோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு சொந்தமாக புதிய ஆதரவற்றோர் இல்லம் கட்டும் பணியில் நாடக நகைச்சுவை நடிகர் ஈடுபட்டு வருகிறார். இவரது பணிக்கு வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களில் இருந்து நிதியும், ஆதரவும் பெருகி வருகிறது.

  1 ஏக்கரில் ஆதரவற்றோர் இல்லம்

  கொரோனா காலத்தில் உணவின்றி தவித்து வரும் ஆதரவற்றோர்கள், முதியோர்கள், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பொருளாதாரத்தை இழந்த நாடக மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் ஆகியோருக்கு தன்னலம் கருதாமல் தொடர்ந்து பல்வேறு பொருள் மற்றும் நிதி உதவிகள் மற்றும் சொந்தமாக வீடு கட்டி தருதல் என சமூக சேவையில் நாடக நகைச்சுவை நடிகர் எம்.கே.ஆர் என்ற ராதா கிருஷ்ணன் ஈடுபட்டு வருகிறார்.

  இவரது சேவை மற்றும் நாடக நடிப்பை பாராட்டி பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது இவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள நொச்சிக்குளத்தில் ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்காக சொந்தமாக சுமார் ஒரு ஏக்கரில் எம்.கே.ஆர் அன்பாலயம் என்ற புதிய ஆதரவற்றோர் இல்லத்தை தொடங்கி உள்ளார். அன்பலாயத்திற்கான கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

  ஊதியம் இன்றி உழைக்கும் தொழிலாளர்கள்

  புதியதாக கட்டப்படும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு தேவையான அனைத்து கட்டுமான பொருட்கள் மற்றும் நிதியுதவியை  வெளிநாட்டு வாழ் தமிழர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், திரைப்பிரபலங்கள் நடிகர் செந்தில், குட்டி புலி நடிகரும் இயக்குநரமான சரவணன் சக்தி ஆகியோர் நன்கொடை  மற்றும் பொருள் உதவி செய்துள்ளனர். அதே போல் ஆதரவு இல்லத்தின் கட்டுமான பணியில் ஈடுபடும் கட்டுமான தொழிலாளர்கள் அனைவரும் சம்பளம் ஏதுமின்றி தன்னிச்சையாக சேவை மனப்பான்மையில் மனிதநேயத்துடன் கட்டிடம் கட்டி தரும் நிகழ்வு பெரும்  ஆச்சர்யத்தை தருகிறது.

  இதுகுறித்து பேசிய நாடக நகைச்சுவை நடிகர் ராதாகிருஷ்ணன்: சாதாரண ஏழை, எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த நான், எனது சொந்த முயற்சியால் நாடக உலகில் 14 ஆண்டு காலம் பயணித்து நகைச்சுவை நடிகர் பப்புன் என்ற தனி அடையாளத்தை பதிவு செய்துள்ளேன். அன்றாடம் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறேன். எனது திறமை மற்றும் சேவையை பாராட்டி அரசு மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் 132 விருதுகள் பெற்று உள்ளேன். கொரோனா காலத்தில் பல்வேறு கிராமங்களில் பொருளாதாரத்தை இழந்த குடும்பங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இயன்ற பொருளுதவி செய்து வருகிறேன். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கல்வி செலவிற்கு உதவியுள்ளேன். சமீபத்தில் உடல்நலக்குறைவால் இறந்த நடிகர் தவசி குடும்பத்தினை பற்றி யூடியூப் வீடியோ வெளியிட்டதால் பல்வேறு திரைப்பிரபலங்கள் நிதியுதவி அளித்தனர். நாடக துறையில் கற்ற தனது திறமையால் 10 படங்களில்  நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். இயக்குநர் நடிகர் சக்தி சரவணன் இயக்கும் படம் மற்றும் இயக்குநர் முத்தையா எடுக்கும் படங்களில் நகைச்சுவை கதாபாத்தில் நடித்து வருகிறேன். சினிமா துறைக்கு செல்வதே எனது வாழ்நாள் லட்சியம். தற்போது விமல் படத்தில் நடித்து கொண்டு உள்ளேன். 58 வயதில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் நினைவாக தமிழகம் முழுவதும் 58,000 மரக்கன்றுகள் நட உள்ளேன்.

  விவேக் விட்டு சென்ற அவரது பணியை  தொடர உள்ளேன். விரைவில் எம்.கே.ஆர் அன்பாலய கட்டுமான பணிகள் நிறைவடைந்து செயல்பட தொடங்கும். பொதுமக்கள், இளைஞர்கள் தனக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றார். அதே போல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடக கலைஞர்கள் போதிய வருமானம் இன்றி பெரும் பொருளாதார நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். ஆகையால் தமிழக அரசு நாடக கலைஞர்களின் நலனில் அக்கறைக் கொண்டு கொரோனா நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Karthick S
  First published: