• HOME
  • »
  • NEWS
  • »
  • local-18
  • »
  • விழுப்புரம்: அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கிய ‘அன்பினம்’ அறக்கட்டளை!

விழுப்புரம்: அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கிய ‘அன்பினம்’ அறக்கட்டளை!

  • Share this:
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உயிர்காக்கும் உபகரணங்களை வழங்கி, உற்றுநோக்க வைத்திருக்கிறார்கள் அன்பினம் நினைவு அறக்கட்டளை தொண்டாளர்கள்.

தமிழகத்தில் அதிகளவில் பரவி வரும் கொரோனா பரவலால், மக்கள் பலரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு  உதவும்  நோக்கில் பல்வேறு தனியார் அமைப்புகள்,  நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள்  களமிறங்கி தங்களால் முயன்ற உதவிகளை செய்துவருகிறார்கள்.

இந்நிலையில்,  விழுப்புரம் சந்தான கோபாலபுரம் பகுதியிலுள்ள இளங்கோவடிகள் தெருவில் செயல்பட்டுவரும் அன்பினம் நினைவு அறக்கட்டளை   மருத்துவம் மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு உதவிகளை செய்யும் நோக்கத்தில் தொடங்கப்பட்டதாகும். மறைந்த  தங்களது நண்பன் பா. மணிகண்டன் என்பவரது  நினைவாக கடந்த  2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அன்பினம் நினைவு அறக்கட்டளையில் 13 நண்பர்கள் உள்ளார்கள்.


கல்வி மற்றும் மருத்துவம் என தனது உதவிகளை சுருக்கி கொள்ளாமல் மக்கள் அல்லல் படும் நேரங்களிலும் 'அன்பினம்' உதவி வருகிறது. இதற்கு,  முன்பு மக்களின் வாக்கையையே சூறையாடிய வர்தா புயலின்போது  பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து  அவர்களுக்கு தேவையான  நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்த்திருக்கிறது அன்பினம் அறக்கட்டளை என்பதை சுட்டிக்காட்டுகிறார் நிர்வாகிகளில் ஒருவரான ஓம் பிரசாத்.

மேலும் அவர் நம்மிடம் , “காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது என்பது போல ஆபத்து காலங்களில்  பல்வேறு உதவிகளை செய்துவருகிறோம். அதுவும், முழு ஊரடங்கு நாட்களில் கொரோனா கால உதவியாக,  தேனி மாவட்டத்தில் வாழ்ந்து வந்த நிறைமாத கர்ப்பிணி பெண்களுக்கு  தேவையான மளிகை மற்றும் சத்துணவு பொருட்களை கண்டறிந்து  நேரடியாக  கொண்டு சேர்த்தது  'அன்பினம்' அதன் தொடர்ச்சியாக,  தற்போது  விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர்  குந்தவி தேவியை தொடர்பு கொண்டு, அந்த மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் என்னவென்று கண்டறியப்பட்டு,அதன் அடிப்படையில், 1 லட்ச ரூபாய்  மதிப்பிலான ஆக்சிஜென் சிலிண்டெர் பொருத்தும் வசதியுள்ள 3 ஸ்ட்ரெட்சர்கள்,  2 வீல்சேர்கள்,  10 ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் , 5 சர்க்கரை நோய் அளவு கருவிகள்,  N 95 முகக்கவச கட்டுகள்  உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அறக்கட்டளை தலைவர் டாக்டர் சண்முகம் வழங்கினார்” என்று குறிப்பிட்டார்.

மருத்துவ பொருட்கள் வழங்கும் நிகழ்வின்போது, மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் புகழேந்தி, ஆர்.எம்.ஓ டாக்டர் சாந்தி,  ஏ.ஆர்.எம்.ஓ டாக்டர் நிஷாந்த், மருத்துவப் பேராசிரியர் டாக்டர் பாபு , அன்பினம் அறக்கட்டளை நிறுவனர் ரவிக்குமார், பொருளாளர் குபேந்திரன்,  நிர்வாகிகள் ராஜேஷ்குமார்,  ஓம் பிரசாத்,  வசந்த் ராஜ் உட்பட பலரும்  கலந்து கொண்டனர்.


செய்தியாளர் : சு. பூஜா  - விழுப்புரம் 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: